வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 ஜூன், 2012

யாழ் நூலகத்தினதும் சிறார்களினதும் மேம்பாட்டிற்கு சிங்கப்பூர் முழுமையான ஆதரவு வழங்கும் - சிங்கப்பூர் வெளிவிகார அமைச்சர் சண்முகம்

யா ழ்ப்பாணம் பொதுநூலகத்தின் தேவைகள் தொடர்பிலும் மாவட்டச் சிறார்களின் கல்வி மேம்பாடு தொடர்பிலும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் அரசு கவனம் செலுத்தும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் உறுதிமொழி வழங்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (31) விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொதுநூலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மக்களது வாழ்வு முன்னேற்றம் காண்பதற்கு எல்லோரது ஒன்றிணைந்த உழைப்பு முக்கியமானது. இதனிடையே நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வு தற்போது பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இருந்த போதிலும் இங்குள்ள சிறார்களது கல்வி மேம்பாடு மற்றும் இந்நூலகத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான தேவைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பு ஒத்தாசையும் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கப்பூர் வெளிவிவாகர அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர். அங்கு வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு யாழ் மாவட்டத்தினதும் நாட்டினதும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். இதன்போது நாட்டில் வாழும் சகல மக்களின் நலன்களை முன்னிறுத்திய வகையிலும் நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் ஒரே தளத்தில் வைத்துக் கொண்டு தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேற்றத்துடன் கூடியதான வகையில் அபிவிருத்தி அடைந்துள்ளதோ அதேபோன்று தமிழர் பகுதிகளும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே தமது விரும்பம் எனவும் சுட்டிக் காட்டினார். முன்பதாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்திந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வரவேற்றதைத் தொடர்ந்து சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வரை தங்கியிருப்பர். இவ்விஜயத்தின் போது குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களில் இக்குழுவினர் கவனம் செலுத்தவுள்ளனர். இதன்போது அவரது பாரியார் திருமதி சீதா சண்முகம் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவராலயத்தின் தூதுவர் சேவேசென் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட இரு நாடுகளினதும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’