பிரிட்டிஷ் மஹாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று அறுபது ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்களுக்கு நடைபெறுகின்றன.
பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ்ஜுக்கும் அவர் துணைவியார் எலிசபெத்துக்கும் மூத்த பிள்ளையாக 1926ஆம் ஆண்டு பிறந்தவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி.
1952ஆம் ஆண்டு தனது தந்தை காலமான நிலையில் வெறும் 26 வயதிலேயே நாட்டின் மஹாராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடினார்.
மன்னரோ ராணியோ நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய ஒரு ஜனநாயக நாடு ஐக்கிய ராஜ்ஜியம்.
இங்கு பிரதமர்தான் அரசாங்கத்தின் தலைவர் என்றாலும், நாட்டின் தலைவராகவும் தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு.
பிரிட்டனில் நூற்றாண்டுகள் காலம் பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும் பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் மஹாராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றிவருகிறார்.
நிகழ்ச்சி நிரல்
வைர விழா கொண்டாட்டங்கள் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரையில் பிரிட்டனில் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றன.
கொண்டாட்டங்களின் துவக்கத்தை அறிவிப்பதற்காக இன்று லண்டன், எடின்பரோ, கார்டிஃப் பெல்ஃபாஸ்ட் ஆகிய ராஜ்ஜியத் தலைநகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் மஹாராணி குடும்பத்தாரோடு கலந்துகொண்டுள்ளார்.
மஹாராணி முன்னிலையில் பிரிட்டனின் முன்னணி ஓபரா இசைப் பாடகி கேதரின் ஜென்கின்ஸ் எ டே ஐவில் நெவர் ஃபர்கெட் என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தைப் பாடினார்.
ஞாயிறன்று லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள இந்த ஊர்வலத்தில் மஹாராணியும் ஒரு படகில் பயணிக்கவுள்ளார்.
திங்களன்று முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கச்சேரி ஒன்று பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று இராணுவ அணிவகுப்புடன்கூடிய ஊர்வலத்தில் ராணி பங்கேற்கிறார்.
வைர விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஐக்கிய ராஜ்ஜியத்திலும் உலகின் வேறு பல இடங்களிலுமாக 4000 ஜோதிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.
இந்த கொண்டாட்ட காலம் முழுக்கவும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு, பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’