பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி உட்பட வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளபோதிலும், இதற்கான ஒப்பந்தம்; இன்னமும் கையெழுத்தாகவில்லை. எவ்வாறாயினும் இந்தியாவுடனான கூட்டு முயற்சியின்றி பலாலி விமான நிலையத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவிடம் கேட்டபோது, விமானப்படையினரின் பயன்பாடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக விமான நிலையத்தை விரிவாக்குவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கூறினார். 'விமானப்படையினருடன் இணைந்து விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு நாங்கள் எண்ணுகின்றோம்' எனவும் அவர் கூறினார். உள்நாட்டு விமானங்களுக்காக 10 விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டு விமான நிலையங்களுக்கான பெரிய தளமாக இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்கவுள்ளதாக சிலர் கூறுகின்றபோதிலும், அங்கு உள்நாட்டு விமான நிலையத்தை மாத்திரம்; நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 'எங்களிடம் 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அவற்றிலொன்று கட்டுநாயக்க விமான நிலையமென்பதுடன் ஹம்பாந்தோட்டை, மத்தளவில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது. கண்டியில்; உள்நாட்டு விமான நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது' எனவும் அவர் கூறினார். குண்டசாலை விவசாயக் கல்லூரியின் காணி மற்றும் அருகிலுள்ள விதை பண்ணை நிலையம் விமான நிலையம் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படமாட்டாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 'இதற்காக நாங்கள் 4 காணிகளை அடையாளம் கண்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டிற்கு பின்னர் மிகப் பொருத்தமான காணியை நாங்கள் தெரிவு செய்வோம். நாங்கள் விவசாய நடவடிக்கைகளை பாதிப்படையச் செய்யமாட்டோம். விவசாயக் கல்லூரியில் விமான நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக்; கூறி அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக சிலர் அழுகின்றனர்' எனவும் அவர் கூறினார். 2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’