மூ ன்று வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த, புலிகளின் மகளிர் பிரிவுத் தலைவி தமிழினியை, புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றும்படி, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கபுலி தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், புனர்வாழ்வு பெற்றுக்கொள்வது தொடர்பில், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினியிடம், இது தொடர்பான அவரது ஒப்புதலை பெறும்படி நீதவான் பணித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களமும் தமிழினி சிறையில் இருந்து புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்படுவதை ஆட்சேபிக்க வில்லை. இந்தத் தீர்ப்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கையை மக்கள் கண்காணிப்புக் குழு ஏற்பாட்டாளர் என்ற முறையில் நான் வரவேற்கின்றேன். ஆனால் தமிழினிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பம் ஏன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படவில்லை என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, சந்தேகங்களின் அடிப்படையிலும், வழக்கு இழுத்தடிக்கப்படும் நிலையிலும், தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழினி போன்று இன்னும் பல பெண்களும், அவர்களது குழந்தைகளும்கூட சிறையில் உள்ளார்கள். வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கிறார்கள். குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும் நீண்ட காலமாக சிறைகளில் இருக்கிறார்கள். தமிழினிக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம், ஏனைய தமிழ் கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். புனர்வாழ்வு அல்லது பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் தமது குடும்பங்களுடன் சேர்க்கப்படவேண்டும். அரசாங்கம் தமது அரசியல் தேவைகளின் அடிப்படையில், புலிகளின் முன்னாள் பிரபலஸ்தர்களுக்கு பொது மன்னிப்பும், சந்தர்ப்பங்களும் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீமும், புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறியும் உரிய பதில்களை அளிக்க வேண்டும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’