யாழ்.மாநகர முன்னைநாள் மேயர் அமரர் அல்பிரட் துரையப்பா அவர்களை உதாரணபுருஷராகக் கொண்டு மாநகரசபையும் பயணிக்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமரர் அல்பிரட் துரையப்பா அவர்களது குடும்பத்தினரின் நிதியுதவியுடன் யாழ்.மாநகரசபையால் யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டம் மற்றும் யாழ்.நங்கை சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னைநாள் மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட போது அப்போது நாம் மௌனம் சாதித்திருந்தாலும் கூட அது ஒரு தவறான நடவடிக்கையே என்பதுடன் அல்பிரட் துரையப்பா அவர்களது கடந்த கால சேவைகளை நினைவில் கொள்ளும் அதேவேளை அவற்றை நாம் பாராட்டவும் வேண்டும். அவரது சேவைக்காலத்தில் அவர் எவ்வாறு இந்த சமூகத்திற்காக செயற்பட்டாரோ அதேபோன்று மாநகர சபையினரும் அல்பிரட் துரையப்பாவை உதாரணமாகக் கொண்டு தமக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் இன்றைய இந்த நிகழ்வு அவருக்குச் செலுத்தும் மரியாதைக்குரிய நிகழ்வென்பதுடன் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளுக்கப்பால் சமூக சேவையை முன்னிறுத்தி எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் உரையாற்றும் போது இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்பது மட்டுமல்லாமல் முக்கியமான நிகழ்வுமாகும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களும் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்குத் துணையாக இருந்து வருறிhர். அத்துடன் யாழ்ப்பாணம் கோம்பையன்மணல் இந்துமயானத்தை புனரமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவை வடமாகாண சபையூடாக தருவதாகவும் இதன்போது ஆளுநர் உறுதிமொழி வழங்கினார். முன்பதாக புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டத்தை அமைச்சர் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் கல்வெட்டுக்களையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அத்துடன் யாழ்.நங்கையின் சிலையினை திறந்து வைத்த அமைச்சர் அவர்கள் அதற்கு மலர்மாலையையும் அணிவித்ததைத் தொடர்ந்து சுற்றுவட்டத்திற்கான நினைவுக்கல்லினை அமரர் அல்பிரட் துரையப்பாவின் மைத்துனர் செந்தில்வேல் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து சுற்றுவட்டத்திற்கு அண்மையான யாழ்.கோட்டையின் மேற்குப்புறம்பான சிவன் பண்ணை வீதிக்கருகே மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அல்பிரட் துரையப்பா அவர்களது சகோதரன் நவரட்ணராஜா மைத்துனர் செந்தில்வேல் இந்தியத்துணைத் தூதுவர் மகாலிங்கம் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’