பாலியல் குற்றச்சாட்டை கூறும் ஆதீனங்கள் தங்களது அறையில் இரகசிய கண்காணிப்பு கெமராவை வைக்கத் தயாரா? நான் தயார். யார் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள் என்று அப்போது தெரியும் என எதிர்ப்பு ஆதீனங்களுக்கு நித்யானந்தா சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஆதீன மடத்தில் அவர் கூறியதாவது, "இங்குள்ள 800 மடாதிபதிகளில் 13 பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்து அமைப்புகள் என்ற பெயரில் சில கயவர்கள் என் மீது கல் வீசுகின்றனர். உண்மையான இந்துக்கள் என் பக்கம் உள்ளனர். என்னை எதிர்ப்பவர்கள் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். 151 நாடுகளில் ஆன்மிகத்தை வளர்ப்பவன் நான். எனது உருவ பொம்மையை 10 பேர் எரித்துள்ளனர். நான் "உம்" என்று சொன்னால் போதும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் உருவ பொம்மைகளை எனது சீடர்கள் எரித்துவிடுவார்கள். சட்டம், ஒழுங்கு கெடக்கூடாது. சண்டையிட்டு இந்து மதத்திற்கு அழிவை உண்டாக்கக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன். மதுரை ஆதீன மடத்தில் சைவமும் தமிழும் வளர்க்க பெரிய நூலகம் அமைக்கப்படும். சிறப்பு பூஜைகளின்போது சமஸ்கிருதம் பயன்படுத்தப்படும். ஆதீன சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க முடியாது. இருப்பினும் ஓராண்டிற்குள் சொத்து விபரம் இணையத்தளத்தில் வெளியிடப்படும். ஆதீன சொத்தில் எங்கெல்லாம் காலியிடங்கள் உள்ளனவோ அங்கு பள்ளி, கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் கட்டப்படும். என் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் ஆதீனங்களுக்கு சவால் விடுக்கிறேன். எனது அறையில் 24 மணி நேரமும் இரகசிய கண்காணிப்பு கேமரா வைக்கட்டும். அவர்கள் அறையிலும் வைக்கத் தயாரா? யார் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள் என்று அப்போது தெரியும். இதை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யலாம். எனக்கு தங்க நகைகள் மீது ஆசை கிடையாது. ஆனால், ஆகம விதிப்படி நகைகளை அணிய வேண்டும் என மதுரை ஆதீனம் கூறியதால் அணிகிறேன்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’