உள்நாட்டு யுத்தம் தொடர்பாக சரத் பொன்சேகா வாயை திறந்தால் நாட்டிற்கு ஆபத்தாகவே முடியும். போர் குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைச் சூழலை அரசாங்கம் தகர்த்தெரிந்து விட வேண்டும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
விடுதலையாகி இரண்டு நாட்களிலேயே சரத் பொன்சேகா தேசத்துரோக கருத்துக்களை வெளியிடுகின்றார் என்றால் போக போக என்ன செய்வார் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்கா உட்பட மேற்குலக சக்திகள் பொன்சேகாவை இலங்கைக்கு எதிராக பயன்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ; சரத் பொன்சேகாவை யாருக்கும் பயந்து விடுதலை செய்யவில்லை. தண்டனைக் குறைப்பின் அடிப்படையில் வந்த உடனேயே நாட்டிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றார். சர்வதேச போர்குற்ற விசாரணைகளுக்காக மேற்குலகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றார். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் தளபதிகளாக இருந்த அனைத்து முப்படைகளை சார்ந்தவர்களும் சர்வதேச பொறிக்குள் சிக்க வைக்கவே பொன்சேகா முயற்சிக்கின்றார். யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் பொது மக்களையும் புலிகளையும் பிரித்து பார்ப்பதில் சிரமம் காணப்பட்டதால் சில சந்தர்ப்பங்களில் சுடப்பட்டிருக்கலாம் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளமையும் அவரே சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுவதும் மிகவும் ஆபத்தான விடயமாகும். ஏனெனில் சிறையிலிருந்து விடுதலையாகி இரண்டு நாட்களிலேயே இவ்வாறான நாட்டிற்கு எதிரான பாரதூரமான கருத்துக்களை வெளியிட வேண்டிய தேவையில்லை. எனவே இதன் பின்னணியில் சர்வதேசம் உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவிடம் நாங்கள் தயவுகூர்ந்து கேட்பது யாதெனில் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய விடயங்களை பேச வேண்டாம் என்பதேயாகும். பொன்சேகாவின் பேச்சைக்கேட்டு அரசும் போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அது முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் அப்போது களத்திலிருந்த கட்டளை தளபதிகளுக்குமே ஆபத்தாக அமையும். அமெரிக்க தூதரகத்திற்கு களத்திலிருந்த தளபதிகளின் பெயர் பட்டியலை யார் வழங்கியது என்பதும் எமக்கு தெரியும். எனவே சரத் பொன்சேகாவின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் நாட்டிற்கு ஆபத்தானதும் சிலவேலை போர்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் அம் மன்றில் சரத் பொன்சேகா யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் தாய் நாட்டில் இல்லை சீனாவில் இருந்ததாக கூறி தப்பித்து விடுவார். அதன் பின்னர் வரிசையாக ஜனாதிபதி முதல் சாதாரண இராணுவ அதிகாரிகள் வரை போர்குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் சிவிலியன்களையும் புலிகளையும் இனங்கண்டுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அவ்வாறு நடைபெற்று இருக்கலாம் என்று கூறுவதில் சரத் பொன்சேகா எதிர்ப்பார்ப்பது எதனை? அதே போன்ற உள்நாட்டில் சில தலைவர்கள் குற்றம் நடைபெற்றுள்ளது போன்றே செயற்படுகிறார்கள் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளதும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும். சர்வதேசத்திற்கு தேவையான சூழலையும் கருத்துக்களையும் சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றார். எனவே இறுதி யுத்தக் காலப் பகுதி தொடர்பாக சரத் பொன்சேகா தொடர்ந்தும் பேசுவது ஆபத்தான விடயமாகும் எனக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’