அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்கவேண்டாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்று வெகு விரைவில் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளார் எனவும் அமைச்சர் ஹீக்கீம் தெரிவித்தார். அநுராதபுரம் சீ.ரீ.சீ.மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இரண்டாம் நிலை பெரிய கட்சி நாமே. எம்மை அரசாங்கத்திலிருந்து பிரித்து வேடிக்கைபார்க்க சிலர் முற்படுகின்றனர். எனினும் கண்டதற்கெல்லாம் காவடி ஆடும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. எம்முடனிருந்து பிரிந்து சென்ற சிலர் முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்த பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். சில பிரதேச எல்லைகளுக்கே போகமுடியாத நிலை ஒரு காலத்தில் எமக்கு இருந்தது. இவ்வாறான பல சவால்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாம் 50 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கியுள்ளோம். வடமத்திய மாகாண சபைத்தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்புரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் கலந்துரையாடல்களை நடத்தி உறுப்பினர்களையும் மட்சி கிளைகளையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரான உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், பா.ம.உறுப்பினர் பாருக், வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹமட் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’