வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 மே, 2012

கைது, தடுத்து வைத்தல் சம்பவங்களை தடுக்காவிடின் சாத்வீக ரீதியில் போராட்டம்: ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்



கை து, தடுத்து வைத்தல் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மக்களை அணி திரட்டி சாத்வீகப் போராட்டங்களை நடத்தும் நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் திருகோணமலையில் நியாயமற்ற முறையில் எதுவித காரணமுமின்றி பல இளைஞர்களும் யுவதிகளும் முதியவர்களும் கைது செய்யப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன் அத்தகைய கைதுகள் பிற இடங்களிலும் சிறிய அளவில் நடைபெற்று வருகின்றன. துரதிஷ்டமாக எம் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது போல் தோன்றுகின்றது. திருகோணமலையில் நடந்த சம்பவம் மீண்டும் அங்கே நடைபெறாதென்றோ அல்லது வேறிடத்திற்கு பரவாதென்றோ எதுவித உத்தரவாதமும் இல்லை. இது மக்களுக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் பெற்றோருக்குள்ள ஒரேயொரு வழி தம்பிள்ளைகளை வெளிநாடு உட்பட வேறிடங்களுக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒரேயொரு மாற்று வழியாக அவர்களை மறைத்து வைப்பதேயாகும். துரதிஷ்ட வசமாக ஜனாதிபதி என்ற வகையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தர் அவர்களின் ஆட்சேபனையை கவனத்தில் எடுக்க தவறி விட்டீர்கள். அச்செயல் வடகிழக்கிலுள்ள மக்களுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கைதுகளும் தடுத்து வைப்புகளும் வட கிழக்கு மக்களுக்கு புதிதல்ல. கடந்த காலத்தில் எமக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. தடுத்து வைத்து சோதனை நடத்தும் வேளையில் என்ன நடக்கும் என அனைவரும் அறிவர். இளைஞர்கள் விசேடமாக மிகவும் அப்பாவி இளைஞர்கள் கைதுகள் நடைபெறுகின்றன என்பதை அறிந்ததும் பயத்தின் நிமித்தம் வீட்டை விட்டு தப்பி ஓடுவர். ஏதோ பெரும் தப்புச் செய்தவர்களை விரட்டுவது போல இத்தகையோரை சந்தேகித்து இராணுவத்தினர் அவர்களை விரட்டிப் பிடிப்பார்கள். இந்த நிலைமை நீடிக்குமேயானால் நாம் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்று தமிழ் இளைஞர்கள் எவரும் வீதிக்கு வர துணிச்சல் வராத நிலை ஏற்படும். வட கிழக்கே நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பிரசன்னத்தை நியாயப்படுத்துவதற்காகவே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேல் நிலவிய கொடூரமான நிலைமையை அரசாங்கம் புதுப்பிக்கின்றது என மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். என்னை பொறுத்தவரையில் இந்த நடவடிக்கை அப்பாவி கிராம மக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்கேயன்றி நிச்சயமான நியாய பூர்வமான நோக்கத்தோடு அல்ல. இந்த நடவடிக்கை எதிர்ப்பார்த்த பலனை தராது என்பது மாத்திரமல்ல ஏற்கனவே நலிந்து நிற்கும் நம் நாட்டிற்கு வெட்கத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தும் எனத்தோன்றுகின்றது. ஜனாதிபதி அவர்களே. இத்தகைய பெருந்தொகையான இராணுவத்தினரை வட கிழக்கில் நிலை கொள்ள வைப்பதற்கு எத்தகைய முயற்சி எடுத்தாலும் உங்களால் அச் செயலை நியாயப்படுத்த முடியாது. யுத்தம் முடிந்து 3 வருடங்களுக்கு 15 நாட்களே மிகுதியாக உள்ளது. நடந்து முடிந்ததை ஒரு யுத்தமாக நான் கூற மாட்டேன். இது ஒரு நாட்டில் ஏற்பட்ட வெறும் கிளர்ச்சியேயென்றும் கிளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஆதரிக்காத பல நாடுகளின் உதவியோடு அரசால் அடக்கப்பட்ட உள்ளூர் கிளர்ச்சியாகும். ஜனாதிபதி அவர்களே. தமிழ் மக்களின் பிரசினைகளை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட 8 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தம் சொத்துக்கள் அத்தனையும் 6 மாவட்டங்களில் பெருமளவு சொத்துக்களையும் இழந்துள்ளனர். உடல் உள ரீதியாக சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். தங்கள் அரசு யுத்தம் முடிந்த வேளையிலும் பார்க்க இப்போது மிகவும் பலமாக உள்ளது. அபிவிருத்திக்கு உதவ வரும் நாடுகளை நான் மிகவும் பாராட்டுகின்றேன். ஆனால் 30 ஆண்டு காலமாக நாம் பட்ட துன்பங்களை அறிந்திருந்தும் ஒரு அரசுக்கு வட கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களைப் பலப்படுத்த உதவியதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ் மக்கள் பயந்த சுபாவமும் மிகப் பலவீனமும் அடைந்திருப்பதால் இராணுவ கெடுபிடிகளை எதிர்க்கின்ற சக்தியற்றவர்காக இருக்கின்றனர். தம் எதிர்ப்பை காட்டுவதற்கு அவர்களுக்குள்ள ஒரேயொரு வழி சாத்வீக வழியை கையாள்வதே. அகிம்சை வழியைப் பின்பற்றும் மக்கள் இராணுவத்தின் சட்ட விரோதமான செயற்பாடுகள், தடுத்து வைப்புக்கள் போன்ற சம்பவங்களை சாத்வீக முறையிலேயே எதிர்க்க முடியும். ஆகவே இத்தகைய துன்பங்களை தமிழ் மக்களுக்குக் கொடுப்பதை உடன் நிறுத்துமாறு அரச படைகளை பணிக்கவும், இன் நிலைப்பாடு தொடரும் பட்சத்தில் மக்களை அணி திரட்டி சாத்வீகப் போராட்டங்களை நடாத்தும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் எனத் தெரிவிப்பதோடு மக்களின் அபிலாஷைகளை மதித்து இராணுவத்தின் கெடுபிடிகளை நிறுத்துமõறும் மீண்டும் வலியுறுத்தி வேண்டுகின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’