தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு வேண்டும் என்றே குறைத்துள்ளது நேர்மையற்ற, பாரபட்சமான செயல்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்துக்கு 2011ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவான 65,140 கிலோ லிட்டருக்கு பதிலாக 44,580 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்து, கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இதே விஷயத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி தங்களிடம் நேரிடையாக கோரிக்கை மனுவும் கொடுத்தேன். மேலும் 2011 ஏப்ரல், மே மாதத்துக்கான 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் அளவை எந்த காரணமும் இல்லாமல் 44,580 கிலோ லிட்டராக குறைத்தது, நியாயமற்ற செயலா கும் என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்நிலையில், 2012 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்துக்கான ஒதுக்கீடு, 39,429 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. கிராம, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெய்யை மட்டுமே நம்பியிருக்கின்றனர். சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காகவே, மத்திய அரசின் இந்த இரக்க மற்ற செயலால் தமிழக ஏழை மக்கள் தண்டிக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதமாக மத்திய அரசு வேண்டுமென்றே குறைத்துள்ளது நேர்மையற்ற, பாரபட்சமான செயலாகும். இந்த விஷயத்தை தாங்கள் முழுமையாக பரிசீலித்து நியாயம் வழங்க வேண்டும். தமிழகத்துக்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். 2012 ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’