இலங்கையில், குறிப்பாக தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினராலும்; துணை இராணுவ குழுவினராலும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு புறம்பான படுகொலைச் சம்பவங்கள் பாரிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழர் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினராலும் அரசாங்கத் தோழமையுடனான துணை இராணுவக் குழுவினராலும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் பாரிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகும். அவற்றில் பல அரசியல் நோக்குடையதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என நோக்கப்பட்ட நபர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்துடன் இணைந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்களாகவும் கருதப்பட வழிவகுத்தன. இவை பீதியையும் சுயதணிக்கையையும் கொண்டதொரு சூழலை உருவாக்கியுள்ளன' என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் 2011ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இன்று வெளியிட்டு வைத்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், உலகெங்கும் உள்ள அரசாங்கங்களை அமெரிக்கா கண்காணித்துக்கொண்டிருப்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகின்றது எனக் கூறினார். 'நாங்கள் கண்காணித்துக்கொண்டிருப்பதுடன், உங்களை பொறுப்பாளிகளாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றோம்' என்பதை எல்லா இடங்களிலும் உள்ள பிரஜைகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு அமெரிக்கா தெளிவுபடுத்துகின்றது' என்றார். 'நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்' என அவர் கூறினார். 'மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சொற்ப எண்ணிக்கையான அதிகாரிகள் மீதே இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடுத்தது. ஆனால், மோதலின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக எவரும் இதுவரை பொறுப்பாளியாக்கப்பபடவில்லை' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கு குறிப்பாக, பொலிஸ் சித்திரவதை, ஊழல், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படுவது ஒரு பிரச்சினையாகும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னிச்சையற்ற முறையில் காணாமல் போதல் தொடருகின்ற பிரச்சினையாக உள்ளபோதிலும் முன்னைய வருடங்களைவிட இத்தகைய சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல சிறைச்சாலைகளை விரிவுபடுத்தவும் மீளமைப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனான ஒத்துழைப்புகளையும் அந்த அறிக்கையில் அங்கீகரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’