வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 மே, 2012

அச்சுறுத்தல் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்: ஜனாதிபதி



20" வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.
"வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்கள் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்கவில்லையா? அவற்றை தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் என்று நான் விரும்புகிறேன்" என கேள்வி எழுப்பினார். கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, "இலங்கையின் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பொன் நாளில் இன்று நாம் இருக்கின்றோம். நாட்டில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்திய நாள் இன்று. இலட்சக்கணக்கான வட பகுதி மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் சுதந்திரமாக நடமாடுவதற்காகவும் யுத்தத்தில் தங்களது உயிர்களையும் உடல் உறுப்புக்களையும் இழந்த படையினரை நாம் கௌரவிக்க வேண்டும். யுத்தம் முடிவுற்ற பின்னர், இத்தொகைப் படையினரை என்ன செய்யப் போகிறீர்கள்? இவர்களை பராமரிப்பதற்கு பாரியளவு தொகையினைச் செலவிட நேரிடுமே? என்றும் பலரும் பலவாறாக கேள்விகளை எழுப்பினர். நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருந்த போது அதனை முற்றாக ஒழிக்கும் பாரிய பொறுப்பு அன்று படையினருக்கு இருந்தது. ஆனால் இன்று, பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைக் கட்டிக்காக்கவும், இந்த நாட்டின் அபிவிருத்தியில் பங்குபற்றவும், நாட்டை அழகுபடுத்துவதுமான பொறுப்புக்களை படையினருக்கு நாம் வழங்கியுள்ளோம். இன்று எமது நாட்டில் எவரும் எந்தவொரு குற்றச்செயல்களையும் செய்ய முடியாது. பாதாள உலகம், போதைப்பொருள் விற்பனைகளில் ஈட்டு வந்தோரையும் நாம் இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தின் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த பல்வேறு தடைகள் தற்போது முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும் சிலரின் மனங்களில் போடப்பட்டுள்ள பயங்கரவாதம் எனும் தடைகள் இன்னமும் நீங்கவில்லை. மேற்படி நபர்களின் மனங்களில் உள்ள பயங்கரவாதம் எனும் கொடியத் தடை நீங்கப்படும் பட்சத்திலேயே அவர்களாலும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்ற நாடு என்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் எமக்கு சுமூகமான உறவு காணப்படுகின்றது. அன்று யுத்தத்தை முற்றாக ஒழிக்க உதவிய நாடுகள், இன்று இலங்கையை அபிவிருத்தியின் வழியில் இட்டுச் செல்லவும் பாரியளவிலான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. இன்று இனங்களுக்கிடையில் ஒற்றுமை வலுப்பெற்றுள்ளமையை நாம் பார்க்கின்றோம். பெற்றுக்கொண்ட வெற்றியைப் பாதுகாப்பதற்கு பொறுமை வேண்டும். எதிர்காலம் தொடர்பில் திட்டம் வேண்டும். எமது எதிர்கால சந்ததியினர் பயமற்ற அபிவிருத்தியான நாட்டுக்குள் வாழ்வதற்கு வழிசமைத்து அதற்கான நடவடிக்கைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் சுபம் உண்டாகட்டும்' என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’