சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அங்கீகரித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் மற்றுமொரு கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனின் பெறுமதி 426.8 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பான ஏழாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இந்தக் கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 2.56 பில்லியன் டொலர்களில் இதுவரை 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய மற்றுமொரு கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. எட்டாவதும், இறுதியுமான மீளாய்வு நிறைவு செய்வதற்கான கடன் வழங்கும் கால எல்லையை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. தற்போதைய கடன் கொடுப்பனவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக, தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முமைத்துவ பணிப்பாளர் மின் சூ குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நிதி மற்றும் கடன் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்ட மின் சூ பணவீக்கம் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’