வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 5 ஏப்ரல், 2012

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்


மிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவா போகவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விடயங்கள் உள்ளமையால் இந்த தூதுக் குழுவில் அங்கு போய் பல விடயங்களை கதைக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டார். ஜெனீவா தீர்மானம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "நாட்டிலே சமாதானம் ஏற்பட, நல்லிணக்கம் ஏற்பட மற்றும் நிலையான தீர்வு ஆகியன கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியும். தவிர வெளிநாட்டு தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை. இந்த நாட்டில் அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்ற ஏனைய சக்திகளும் ஒரு தேசிய இணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் யதார்த்தமான முயற்சிகளை எப்படியாவது முறியடித்து, மீண்டும் கனவுலகிலே சஞ்சரித்துக்கொண்டு இந்நாட்டில் ஒரு தனி நாட்டை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்க்கக் கூடிய தீவிரவாத போக்கு மேலோங்குமாக இருந்தால் இந்நாட்டில் நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியாது போகலாம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதோடு நெருங்கிய தொடர்புடைய, பொறுப்புக்கூற வேண்டிய இந்நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலும், நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு சமூகத்தின் உணர்வலைகளைப் பிரதிபலிக்கும் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையிலும் இந்த விவாதத்தில் நான் பங்குபற்றுவது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகின்றேன். நாங்கள் ஜெனீவாவுக்கு சென்று பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து சம்பந்தப்பட்ட விவகாரத்திலுள்ள நியாயங்களையும், அவற்றிலுள்ள சிக்கல்களையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் வெளிச் சக்திகள் தலையிட்டு முழுச் செயல்பாட்டையும் சீர்குலைத்து விடக் கூடிய அபாயத்தை எடுத்துரைத்தோம். அந்த முயற்சியின் போது, வெளிவிவகார அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பகலுணவு சந்திப்பில் பங்குபற்றிய பிரநிதிகள் மத்தியில் நான் கருத்து தெரிவிக்கும் பொழுது, நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிரமங்கள் இருந்த போதிலும் தேவையற்ற தலையீகள் காரணமாக இனங்களுக்கிடையில் பாரதூரமான துருவப்படுத்தலை அது ஏற்படுத்திவிடும் என்பதை சுட்டிக்காட்டினேன். இவ்வாறிருக்கத்தக்கதாக, வெளிநாட்டு தமிழ் இணையத்தளமொன்றில் நேற்று வெளிவந்துள்ள செய்தியொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதில் காணப்படுவதாவது, "ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவை பகிஷ்கரியுங்கள்: தமிழ் படைப்பாளிகள் கழகம்". கம்பன் விழாவினர் ஜெனீவாவில் மனித உரிமை அவையில் அமெரிக்க முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடி பரப்புரை செய்த ரவூப் ஹக்கீமை விழாவில் தொடக்க உரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் கம்பதாசர்களால் நடாத்தப்படும்; விழாவை புறக்கணிக்குமாறு தமிழ் தேசியத்தை நேசிக்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். இது எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களின் கூப்பாடாகும். இவ்வாறே மற்றொரு புறத்திலும் தீவிரவாத சக்திகள் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நண்பர்களைப் போல அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இன்று தீவிரவாத தமிழ் தேசியவாதம் உண்மையில் இந்தியாவின் நட்பை கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் தான் இன்று அவர்களுடைய தீவிரவாதம் ஈற்றிலே முடிவுக்கு வந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இலங்கை சார்பாக இந்தியாவுக்குள்ள அரசியல் யதார்த்த்தை புரிந்துகொள்ள முடியாத இந்த தீவிரவாத தமிழ் உணர்வாளர்கள் இறுதியில் இன்றைய நிலைமைக்கு வகைசொல்லியாக வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடைய பார்வையில் இவர்களுடைய நோக்கு எப்படி இருக்கிறது என்றால், புஷ்ஷூடைய அரசாட்சியில் மாதிரி காணப்படுகிறது. அதாவது 'நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் அல்லது எங்களுடைய எதிரியென்று தான் உங்களை நாங்கள் கருதுவோம். என்றவாறான பார்வையில் தான் எல்லாவற்றையுமே பார்க்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் ஒரு தமிழ் இலக்கிய நிகழ்விற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் போய் தொடக்க உரையாற்றுவதைக் கூட அவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். அதுவும், தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக நான் ஜெனீவாவுக்கு போகவில்லை. நான் இந்த நாட்டின் நீதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு எங்களுடைய அமைச்சு பொறுப்புக்கூற வேண்டிய பல விஷயங்கள் இருப்பதனால் நான் இந்தத் தூதுக் குழுவில் அங்கு போய் பல விஷயங்களை கதைக்க நேரிட்ட வேளையில் இவர்கள் இந்த விஷயத்தை எந்தப் பார்வையில் பார்க்கிறார்கள். எவ்விதமான தீவிரவாத போக்கிலே இந்த விஷயத்தை நோக்குகிறார்கள். இந்த நாட்டிலே சமாதானம் வருவதற்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். அதேவேளை ஜெனீவாவுக்கு செல்வதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தீர்மானித்த போது அவர்களின் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டன. இது பெரும்பாலும் வெளிப்படையாக தெரிந்த விடயமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை ஒரு துரோகியென குறிப்பிட்டு அவரது கொடும்பாவியை எரித்து அல்லது தூக்கில் தொங்கவிட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதை தடுக்கும் முயற்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஈடுபட்டார்கள். எனவே இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் சமூகம் என்று சொல்லிக்கொள்கின்ற இந்த தமிழ் உணர்வாளர்கள் இந்த நாட்டில் இருக்கின்ற யதார்த்த்தை புரிந்து கொள்ளாமல், இந்த நாட்டில் அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்திருக்கின்ற ஏனைய சக்திகளும் ஒரு தேசிய இணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கு எடுக்கின்ற யதார்த்தமான முயற்சிகளை எப்படியாவது முறியடித்து, மீண்டும் கனவுலகிலே சஞ்சரித்துக்கொண்டு இந்த நாட்டிலே ஒரு தனி நாட்டை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ளக்கூடிய தீவிரவாதப் போக்கு மேலோங்குமாக இருந்தால் நிச்சயமாக இந்த நாட்டிலே நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் இப்பிரச்சினை விவாதிக்கப்படுகின்றது. ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் அதன் பிரதிபலன்களில் நியாயமான செயற்பாடுகளை காண முடிகிறது. நல்லிணக்க செயற்பாடுகளை நாம் சரியாகப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் நலனுக்காக தீர்மானங்களை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும். போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அதனால் அதன் பின்னரான செயற்பாடுகள் மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். அதேவேளை கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடந்தவற்றை கவனத்தில் எடுத்து இந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். எதிரணியினரின் நிலைப்பாட்டை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை அரசு தனது கடப்பாட்டை நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு சுரங்கத்தின் ஊடாக அதாவது, குகையினூடாக வெளிச்சத்தை நோக்கும் ஒரு பார்வையை கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்பதை இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களும் விளங்கி வைத்திருக்கிறார்கள். மனித உரிமை கவுன்சிலோடு தொடர்ச்சியாக ஈடுபாடு கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம் அதன் கடப்பாடுகளில் இருந்து விலகி ஒடி விடாது வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. நாட்டிலே சமாதானம் ஏற்படுவதாக இருந்தால், நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால், நிலையான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியுமே ஒழிய வெளிநாட்டுத் தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். இதற்கு முரணாக ஐ.நா மனித உரிமை அமைப்பினரும் தலையிடுவதாக இருந்தால் ஓர் அரசியல் நோக்கத்திற்காக மூக்கை நுழைப்பதாக இருந்தால் நிச்சயமாக அது சாத்தியப்படப் போவதில்லையென்பதை நாங்கள் மனதிற் கொள்ள வேண்டும். எனவே தான் என்னைப் பொறுத்த மட்டிலே இந்த நாட்டிலே கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்றுகின்ற முயற்சியில் எதிர்க்கட்சிகைளச் சார்ந்த அனைத்து சக்திகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைத்து இந்த விஷயத்தை நோக்கி நாங்கள் முன்நகர வேண்டும். அதேவேளை ராஜதந்திர ரீதியாக இந்த விஷயத்துக்கு நாங்கள் அளவுக்கு மீறிய அழுத்தத்தைக் கொடுத்து மக்கள் மத்தியிலே கூடுதலான எதிர்பார்ப்பை வளர்த்து ஏதோ நாளை மறுநாள் எங்களுக்கு ஏதோ வித்தியாசமான நிலை தோன்றி விடும் என்கிற ஒரு கனவுலக சஞ்சாரத்தில் உலவி அத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல் புத்திசாதுரியமாக செயல்பட வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’