வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையொட்டி ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை


ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையொட்டி இன்று (03.04.2012) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை. (உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது)
கௌரவ சபாநாயகர் அவர்களே! இலங்கையின் சமகால நிலைமைகள் இன்று சர்வதேசப் பரப்பில் கவனத்தைப் பெற்றுள்ள சூழலில் நாம் அவை பற்றிய கவனங்களை அவதானிப்பதற்காக இங்கே கூடியிருக்கிறோம். யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு, அமைதியைக் குறித்தும் சமாதானத்தைக் குறித்தும் அரசியற் பிரச்சினைகளுக்கான தீர்வைக் குறித்தும் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது. ஆகவே, அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் நாமனைவரும் இருக்கிறோம். இதில் அனைவருக்கும் முதன்மையான பொறுப்புகள் உண்டு. நாங்கள் இலங்கையர் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். வெளிச் சூழலில் இருந்து ஏற்படுகின்ற எத்தகைய நெருக்கடிகளும் முழு இலங்கையரையுமே பாதிக்கும். இன்றைய சர்வதேச அரசியற் போக்குகளை மனங்கொள்ள வேண்டிய அதேநேரத்தில் எமது அரசியற் சூழலையிட்டும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இந்த வகையில், யுத்தம் முடிவடைந்தாலும் நாடு இன்னமும் நெருக்கடி நிலையிற்தான் உள்ளது என்பதை நாம் உணர்கின்றோம். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலமாக, உள்நாட்டு நெருக்கடிக்கு ஒரு கட்டத்தீர்வை நாம் கண்டிருந்தாலும் ஏனைய அரசியல் நெருக்கடிகள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டியவையாகவே உள்ளன. யுத்தத்திற்குப் பிறகு மக்களிடையே பதற்ற நிலை குறைந்திருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அகால மரணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை இந்த அரசாங்கம் வைத்திருப்பதும் உண்மையானது. தடைகளும் வரையறைகளும் தகர்க்கப்பட்டு சகல மக்களும் இந்த நாட்டில் எங்கே வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நிலைமை உருவாகியிருப்பதும் உண்மையானதே. இன நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் நாம் இன்னும் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதற்கான அழைப்பை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் விடுத்துள்ளார். ஒரே தேசம் என்ற குடையின் கீழே இந்த நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்களாக வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு எல்லோருடைய பங்களிப்பும் கிட்ட வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் அழைப்பாகும். இந்த வகையிற்தான் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளச் சிந்தித்தது. பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது வேறு. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முயற்சிப்பதும் அந்த முயற்சியில் பங்கெடுப்பதும் வேறு. எதையும் எவரும் எப்படியும் பேசிவிட்டுப்போகலாம். ஆனால் நடைமுறையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தீர்வைக் காண்பதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றி காண்பதே இங்கே தேவைப்படுகிறது. அதன் மூலமே நாம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அந்த வகையிலே நாம் இன்று இலங்கையின் இனமுரண்பாடு தொடர்பான விவகாரங்களில் நடைமுறைக்குச் சாத்தியமான அணுகுமுறைகளையும் நிலைப்பாட்டையும் எடுத்துச் செயற்பட்டு வருகிறோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கான எமது இணக்கத்தைத் தெரிவித்திருந்தோம். அதேவேளை யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஒட்டி எமது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் தெரிவித்து வருகிறோம். எமது இந்த நிலைப்பாட்டை ஒத்ததாக இந்த அரசாங்கத்தில் அங்கத்துவத்தை வகித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. தேசிய ரீதியில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களாகிய கௌரவ வாசுதேவ நாணயக்கார கௌரவ டி.யு.குணசேகரா கௌரவ திஸ்ஸ விதாரண ஆகியோரும் வலியுறுத்தி வருகின்றனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் எனப் பல நிலைப்பட்டவர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களையும் அபிப்பிராயங்களையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆகவே அந்த அறிக்கைக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. இந்த அறிக்கையை இந்த நாட்டிலுள்ள மக்களும் இடதுசாரிக்கட்சிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் அமைதியையும் நிரந்தரத்தீர்வையும் விரும்புகின்ற பிற தரப்பினர் பெரும்பாலான ஊடகத்தினர் மற்றும் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் எனப் பலரும் வரவேற்றிருக்கின்றனர். எமது மக்கள் பட்ட வதைகளும் வலிகளும் ஆற்றப்பட வேண்டுமேயானால் அவற்றுக்கு ஈடாக தீராப் பிரச்சினையாக நீடித்து வரும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அதன்மூலம் நிம்மதியாகவும் சுதந்திர பிரஜைகளாகவும் எமது மக்கள் வாழவைக்கப்பட வேண்டும். மாறாகப் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் மூலமாக நாம் எதையும் சாதித்து விட முடியாது. இழப்புகளைச் சொல்லி அழுவதாலும் பகமையுணர்வுகளுக்கு இடமளிப்பதன் மூலமாகவும் இன்னும் இன்னும் நெருக்கடிகளையே நாம் சந்திக்க வேண்டியும் வரும். இதேவேளை எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாம் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வரும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஆகவேதான் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தி இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும் அரசாங்கத்தின் செயலுறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும்படி நாம் கேட்கின்றோம். இந்த நாட்டிலே மேலும் மேலும் இனமுரண்பாட்டை வளர்ப்பதற்கு நாம் எவரும் இடமளிக்கக் கூடாது என்று இந்த அவையிலே கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கொள்கையின் அடிப்படையில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கும் திடசங்கற்பத்தையும் நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்தத் திடசங்கற்பத்தை நடைமுறையாக்கி இதை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதிலேயே உண்மையான வெற்றியும் நிரந்தரத் தீர்வும் தங்கியுள்ளன. இதேவேளை நாம் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் பாதுகாத்துக்கொண்டே எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியை முன்னெடுக்கவும் விரும்புகிறோம். சிங்கள மக்களைப் பகைத்துக்கொண்டு எந்தவொரு அரசியற் தீர்வையும் நாம் நடைமுறைப்படுத்தி விட முடியாது. எந்த ஒரு சர்வதேச அழுத்தங்களினாலும் இலங்கைத் தீவில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி விட முடியாது. இனமுரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எதையும் சாதித்து விடவும் முடியாது. இவை கடந்த காலத்தில் நாம் பட்டுக்கொண்ட பட்டறிவின் பாடங்களாகும். ஆகவே இலங்கைத் தீவின் ஒருமைப்பாட்டைப் பேணிக்கொண்டு, அதனுடைய இறைமையைப் பாதுகாத்துக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசிலுரிமைகளையும் வென்றெடுக்க நாம் விரும்புகிறோம். இந்த அடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எம்மை இணைத்துள்ளோம். இந்த அடிப்படையிலேயே தமிழ் பேசும் மக்களின் சார்பில் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நாம் அரசாங்கத்துக்கு ஆதரவாக ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தோம். இதன்மூலம் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கூடிய இன ஐக்கியச் சூழலைப் பாதுகாக்கவும் நாம் விரும்பியிருந்தோம். நாம் வழங்கிய இந்த ஆதரவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரு நல்ல சமிக்ஞையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதேவேளை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நிரந்தர சமாதானத்துக்கான அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளை நாம் இந்த இடத்தில் வரவேற்கிறோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவென்பது இலங்கைத்தீவின் அமைதிக்கும் சுபீட்சமான எதிர்காலத்துக்கும் இன நல்லுறவுக்கும் ஏற்றதாக அமைய வேண்டும். இதையே இந்த நாட்டு மக்களும் விரும்புகின்றனர். நீண்ட காலப் போரினால் மிகக் கொடிய துன்பத்தைச் சந்தித்த இந்த நாட்டு மக்களை எந்த நிலையிலும் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தினுள் யாரும் தள்ளி விட அனுமதிப்பது பொருத்தமானதேயல்ல. அது மீண்டும் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கும் அநீதியாகும். மிகக் கடினமான நிலையில் நாம் பெற்றுக்கொண்ட இந்த அமைதிச் சூழலை மீண்டும் இழப்பதாகி விடுவதாக அது அமைந்து விடக்கூடிய அபாயமும் உண்டு. ஆகவே இந்த நாட்டின் இறைமையையும் சுபீட்சத்தையும் மனதிற் கொண்டு ஒன்று பட்ட இலங்கையராக நின்று ஒன்று பட்ட இலங்கையராக வாழக்கூடிய ஏதுநிலைகளை உருவாக்குவோம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நாம் சமாதானத்தீர்வைக் குறித்த விட்டுக்கொடுப்புகளுக்கும் ஏற்றுக்கொள்ளல்களுக்குமாக எம்மை அர்ப்பணிப்போம் என்று கேட்டு எனது இந்த உரையினை நிறைவு செய்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’