எமது ஜனாதிபதியின் வழிகாட்டலில் இராணுவத்தினரின் மூலம் பிரபாகரனின் தாயார், தமிழ்ச்செல்வனின் குடும்பம், சூசையின் குடும்பம் போன்றோரை காப்பாற்றியதைப் பற்றியெல்லாம் கூறாமல் எமது நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயல்கின்றார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானையில் உள்ள இராணுவத்தின் 23ஆவது படையணி தலைமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, அங்குள்ள இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஜெனீவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் மாநாடு தொடர்பிலேயே தற்போது ஊடகங்களில் செய்திகளாகவுள்ளன. யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்காவின் மூலம் ஜெனீவா நகரில் மனித உரிமைகள் பட்டயம் என்ற போர்வையில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதேபோன்று சனல் 4 தொலைக்காட்சியில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு என்றால் எமது ஜனாதிபதியின் வழிகாட்டலில் இராணுவத்தின் மூலம் தமிழ்ச்செல்வனின் குடும்பம், சூசையின் குடும்பம், பிரபாகரனின் தாயார் போன்றோரை காப்பாற்றியதைப் பற்றியெல்லாம் கூறாமல் எமது நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயல்கின்றார்கள். எமது நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாது இன்று நாட்டில் அனைத்துப் பிரதேசங்களிலும் அபிவிருத்திகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால்தான்' என்றார். இந்நிகழ்வில் 22ஆம் 23ஆம் படையணியைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், இராணுவத் தளபதிக்கு அளிக்கப்பட்ட இராணுவ மரியாதை அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’