வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 மார்ச், 2012

ஜெயலலிதாவின் அறிக்கைக்கு கருணாநிதி பதிலடி


.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடும் என்ற பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது திமுக தலைவர் கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகும் செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததை கருணாநிதி பதிலுக்கு விமர்சித்துள்ளார்.
பிரதமரின் பேச்சின் போது தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மேசையைத் தட்டி வரவேற்ற காட்சி, தொலைக்காட்சியில் காட்டப்பட்டுள்ளதையும் கருணாநிதி தானது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். திங்கட் கிழமையன்று பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கருணாநதி, திமுக நடத்துவதாக இருந்த மாநிலம் தழுவிய உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் கைவிடப்படுவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவென கூடவிருந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறிய கருணாநிதி, இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முன்வராவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேறி, கொள்கை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்ற வகையில் நடவடிக்கைகளை உத்தேசித்திருந்ததாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பிரதமரின் அறிவிப்பு திமுகவின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் கூறிக்கொண்டிருந்தார்.

மழுப்பல்

முதல்வர் ஜெயலலிதாவோ, பிரதமரின் உரை மழுப்பலாகவே இருக்கிறது, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையை பன்னாட்டு விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்ற அக்கறை அவரிடம் இல்லை, இருந்தும் ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுவதாக கருணாநிதி அறிவித்திருப்பது 2009ல் அவர் நடத்திய மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகம்போல் தான் எனக்கூறியிருந்தார்.
போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் அறிவித்த கருணாநிதி, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது என்ற அறிவிப்பை சாக்காக வைத்துக்கொண்டு தனது எதிர்ப்பைக் கைவிட்டார் எனக்கூறியிருந்தார் ஜெயலலிதா.
அதற்கு மறுமொழியாக கருணாநிதி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் அப்போது உண்ணாவிரதம் இருந்தது உண்மையான அக்கறையினால்தான் என்று கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், சோனியா காந்தி அவர்களும் தலையிட்டு என்னிடம் இலங்கையிலே உள்ள நிலை குறித்து விளக்கி தன் உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர் என நினைவு கூர்ந்திருக்கிறார்.

மக்கள் சாவது சகஜம்

முதல்வர் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா

வயது முதிர்ந்த நிலையில் தனது கோரிக்கையினை வலியுறுத்த ஏதோ சில மணி நேரங்களாவது தான் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அதைக்கூட இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா செய்ய முன்வரவில்லை என்றும், “போர் என்றால் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஒரு கட்டத்தில் கூறியது அவரே என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
தவிரவும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, போராட்டக்காரர்களுக்கு ஊக்கமும் கொடுத்துவிட்டு இப்போது அவர்களை கைது செய்து வருவதற்குப் பெயர் தான் நாடகம் என்றும் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

கூடங்குளம்

கூடங்குளம் கடந்த ஆறு மாதங்களாக மூடிக் கிடக்க யார் காரணம்? போராட்டக் குழுவினரை ஜெயலலிதா அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை ஏற்று 22-9-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு நிலைய பணிகளை நிறுத்திவைக்குமாறு பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதால் தானே கடந்த ஆறு மாதமாக அந்த அணு மின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு- இருள் சூழ்ந்ததோடு, கடந்த ஆறு மாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம் பணியே இல்லாமல் ஊதியம் கொடுத்த அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார் என்று வினவுகிறார் கருணாநிதி.

அது மாத்திரமல்ல, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசே ஊக்கம் கொடுத்த காரணத்தால், அப்பாவிப் பொதுமக்கள் ஏமாந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு, இன்று அந்தப் போராட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஏமாற்றி அவர்களையே கைது செய்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார், அதுதான் நாடகம், அதேபோன்று கூடங்குளம் வளர்ச்சிப் பணிக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதும் நாடகமே என்கிறார் கருணாநிதி..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’