கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவர் உதயக்குமார் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்று கூடங்குளம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி ஜார்ஜின் கூடங்குளம் வருகையைத் தொடர்ந்தே இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய ஒத்துழைப்புடன் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் எங்களுக்கு வேண்டாம். இந்த அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கினால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், வாழ்க்கை சீர்குலையும் என்ற கோஷத்துடன் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தது அணு மின் நிலைய எதிர்ப்புக் குழு. கிராமத்தினர், பெண்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினருடன் தொடங்கிய இந்த உண்ணாவிரதம் நாளுக்கு நாள் வலுப்பெறவே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்தது. உதயக்குமார் வெளிச்சத்திற்கு வந்தார். இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான், எனவே போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 16ம் தேதி கோரிக்கை விடுத்தார். செப்டம்பர் 19ம் தேதி அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மக்களின் அச்சம் போகும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதன் பின்னர் பிரதமரின் உத்தரவின் பேரில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இடிந்தகரை வந்தார். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சரவையில், கூட்ங்குளம் பகுதி மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணு மின் நிலைய செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. அக்டோபர் 7ம் தேதி தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவும், போராட்டக்காரர்கள் அடங்கிய குழுவும் பிரதமரை சந்தித்துப் பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து உண்ணாவிரதம் தொடரும் என உதயக்குமார் அறிவித்தார். இந்த நிலையில்தான் நவம்பர் 7ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு நடத்தி ஒரு ஆபத்தும் இல்லை என்று அறிவித்தார். ஆனால் போராட்டக்குழுவினர் தங்களது நிலையிலிருந்து விலகவில்லை. மாறாக கலாமை கடுமையாக விமர்சித்தனர். கலாமையே இவர்கள் விமர்சித்ததால் கடும் அதிருப்திக்குள்ளானார்கள். முடிவே இல்லாமல் பிரச்சினை நீண்டு வந்த நிலையில்தான் பேராசிரியர் இனியன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை பிப்ரவரி 29ம் தேதி நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகுதான் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது போராட்டக்காரர்களின் பிடிவாதம் தமிழக அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்துள்ளதாக கூறப்படுகிறது. பல முறை விளக்கம் அளித்த பின்னரும் கூட போராட்டக்காரரர்கள் பிடிவாதமாக அணு உலை வேண்டாம் என்று சொல்வதை முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதை உதயக்குமாரிடமே நேரில் முதல்வர் சொல்லியதாகவும் கூறுகிறார்கள். இதையடுத்து அணு மின் நிலையத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே கூடுதல் டிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்துள்ளார். மேலும், தன்னை உதயக்குமார் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சந்தித்தபோது உதயக்குமாரிடம், முதல்வர் முகம் கொடுத்தே பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டால் அரசுக்குப் பெருமளவில் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துள்ள ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கினால், மின்தடையை பெருமளவில் குறைக்க முடியும் என்று நம்புகிறார். ஆனால் உதயக்குமார் தலைமையிலான குழுவினர் போராட்டங்களைத் தொடரப் போவதாக மட்டுமே தொடர்ந்து கூறி வருவது அவரை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம். இதனால்தான் இந்த முறை அணு மின் நிலையப் போராட்டங்களை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று அவர் நேரடியாகவே கூறி விட்டதாக கூறுகிறார்கள். இதனால் உதயக்குமார் கடும் அதிர்ச்சியாகி விட்டாராம். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியில் வந்த அவர், இந்த அம்மாவைப் போய் நம்பி வந்தோமே என்று அதிருப்தியாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதல்வரின் காதுகளுக்கும் எட்டி விட்டதாக கூறுகிறார்கள். இந்தப் பின்னணியில், அணு மின் நிலையப் பணிகளை தொடங்க தமிழக அரசு விரைவில் மத்திய அரசுக்கு பச்சைக் கொடி காட்டப் போவதாக பரபரப்பாக கூறப்படுகிறது. அப்படி அறிவித்தவுடன் போராட்டங்கள் வெடித்தால் அதை ஒடுக்குவதற்காகவே இப்போதே ஜார்ஜை கூடங்குளத்திற்கு முதல்வர் அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் புதிய போராட்டங்களை உதயக்குமார் அறிவித்தார் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸாரைக் குவித்து எந்த ரூபத்திலும் போராட்டமோ, தடங்கலோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புதிய திருப்பத்தால் கூடங்குளம் பகுதியில் பரபரப்பு கூடி வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரலாம் என்று கூறுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’