இலங்கைத் தமிழ் மக்களினது மட்டுமல்லாது இந்தியத் தமிழ் மீனவர்களினது நலன்களிலும் அக்கறை கொண்டவராகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்கி வருகின்றார் எனத் தமிழக மீனவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியத் தமிழக மீனவர்களுக் கிடையிலான கலந்துரையாடலின் போதே தமிழக மீனவர்கள் இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழக மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றார் என்பதுடன் இவரது தலைமையின் கீழ்தான் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இம் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக 1974ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் இன்றுவரை நிரந்தரமான தீர்வை காண முடியவில்லை. அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களில் மட்டுமல்லாது இந்தியத் தமிழ் மீனவர்களின் நலன்களிலும் மேம்பாட்டிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் இதன்போது அவர்கள் புகழாரம் சூட்டினர். எமது நாட்டிலுள்ள அமைச்சர் எவரும் இதுபோன்று மக்களிடம் சென்று அவர்களது நலன்கள் குறித்து ஒருபோதும் விசாரிப்பதில்லையென்றும் அந்த வகையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் இறுதியானதுமான தீர்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத்தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசில் மீன்பிடித் துறைக்கென தனியான அமைச்சு இல்லையெனவும் பெருந்தொகையான மூலதனத்தைக் கொண்டு தாம் தொழில் செய்வதால் மாற்றுத் தொழில் செய்ய முடியாது எனவும் தமிழக அரசு மாற்றுத் தொழிலுக்கான மானியங்களைப் பெற்றுத் தருவதில் அக்கறை காட்டாத காரணத்தினாலேயே தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியதுடன் கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் நேற்றைய இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் தமிழக மீனவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே இலங்கையின் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மற்றும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடியால் அழிக்கப்பட்டுவரும் கடல்வளங்கள் தொடர்பாகவும் தாம் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கினர். இதன்போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்களான ரவீந்திரன் கணேசமூர்த்தி நெடுந்தீவு பிரதேச செயலர் சிறீ மற்றும் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரஜீவ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’