வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 மார்ச், 2012

ஐ.நா. தீர்மானத்தில் சமநிலையை இந்தியா அறிமுகப்படுத்தியது: ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன் சிங் கடிதம்


.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் 'சமநிலையான அம்சங்களை' அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். "சாத்தியமான முன்னோக்கிய வழியை கண்டறிவதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் நெருக்கமாக தொடர்பிலிருக்குமாறு எமது தூதுக்குழுவினருக்கு நான் அறிவுறுத்தியிருந்தேன். இப்பிரேரணையில் சமநிலையான மொழிப்பிரயோகத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவதில் எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை நாங்கள் மேன்மை தங்கிய நீங்கள் அறிந்திருப்பீர்கள்" என அக்கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இப்பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதம் எழுதியதையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். "13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையிலான, அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கல் பொதியானது பல பிரச்சினைகளுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு இட்டுச்செல்வதுடன், இலங்கையின் அனைத்து பிரஜைகளும், அவர்கள் எந்த இனத்தவராயினும் நீதியையும், கௌரவத்தையும், சமத்துவத்தையும் சுயமரியாதையும் காண்பதற்கான சூழலையும் உருவாக்கும் என்பது தீர்மானமாகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஆர்வம் கொண்டுள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அனைத்து சமூகங்களும் செழிப்படையக்கூடிய உறுதியான பாதுகாப்பான, சுபீட்சமான சூழலை இலங்கையில் ஏற்படுத்தல் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை மேலும் மேலும் வளர்ந்து வலிமையாக்குவதற்கான பொது நோக்கத்திற்காக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’