தேசப்பற்றுக்குள் மறைந்து கொண்டு நாட்டுக்குள் வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் பெறல், கொலைகள், போதைவஸ்து வியாபாரம் உட்பட பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளை அரசாங்க சார்பு தரப்பினர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலைமையை மக்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். இதற்கெதிராக தொடர் போராட்டங்கள் நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கஹவத்தையில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டதன் பின்னணியிலும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகத்திரைகள் இன்று கிழிக்கப்பட்டுள்ளன. பிரதியமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ தொலைபேசியூடாக வர்த்தகரொருவரிடம் ரூபா 2லீ கோடி கப்பம் கோரப்பட்டுள்ளது. இந்தப் பிரதியமைச்சர் தொடர்பில் இதற்கு முன்பும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல ஆளும் கட்சி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் பின்னாலும் வெள்ளை வான்கள் உலாவுகின்றன. கொலன்னாவை நகர சபைத் தலைவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். அவரை வெள்ளை வானில் கடத்த சீருடையணிந்தோர் முயற்சித்ததை அண்மையில் கண்டோம். கடத்துவதற்கு வந்தோரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அதிகாலை 4.00 மணியளவில் அவர்கள் விடுதலையõகியுள்ளனர். பொரளையிலும் இவ்வாரம் மீன் வியாபாரி வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டோர் அரசியல் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போதைவஸ்து விற்பனை பின்னணியில் அரசு சார்பானோர் இருப்பது வெளிப்படையாகியுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் குற்றச் செயல்கள், சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. ஊடகங்களிலும் இச்செய்திகளே பிரதான இடங்களைப் பிடித்துள்ளது. பலமுள்ள அரசியல்வாதிகளே இவற்றில் ஈடுபடுகின்றனர். இது துர்ப்பாக்கியமான நிலைமையேயாகும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் பின்னால் வெள்ளை வான்கள் துரத்தும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஜெனீவாவில் கடுமையான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில், இங்கு வெள்ளை வான் கடத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் மேலும் மேலும் பிரச்சினைகள், நெருக்கடிக்குள்ளாகும் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட பின்னர் அரச மரியாதை வழங்கப்பட்டது. சந்தேக நபர் துமிந்த சில்வாவுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா இருக்கும் இடம் தெரியாது என இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா பாராளுமன்றத்தில் மூன்று மாத விடுமுறை துமிந்த சில்வாவுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆனால் துமிந்த இருக்கும் இடம் தனக்கு தெரியாதென்கிறார். எனவே இரகசிய பொலிஸார் அமைச்சரிடம் விசாரணைகளை நடத்த வேண்டும். நாட்டில் இன்று மேல் மட்டம் தொடக்கம் கீழ் மட்டத்தினர் வரை குற்றச் செயல்கள், சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனை நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தை நிலைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்றைய நாட்டின் நிலைமையை மக்களாலேயே மாற்ற முடியும். எனவே, அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’