மே ற்குலக நாடுகள் சிலவற்றிலிருந்து தூதரகங்களை மூடும் தீர்மானத்துக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் தொடர்பில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளிலுள்ள சில தூதரகங்களை ஆபிரிக்க நாடுகளுக்கு மாற்றும் தீர்மானமானம் ஜெனீவா பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருந்தது என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றை மூடிவிட்டு, போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, நோர்வே, சுவீடன் நாடுகளுடனான விவகாரங்களை மேற்பார்வை செய்வதற்கு ஒரேயொரு தூதரகத்தை மாத்திரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்கள் தொடர்ந்தும் இருக்கும் எனவும் மூடப்படும் தூதரகங்களுக்கு பதிலாக ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளில் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறுகையில், 'எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வளங்களே உள்ளன. இவ்வளங்கள் வியூக முக்கியத்துவமுள்ள இடங்களுக்கு பகிரப்பட வேண்டும். உதாரணமாக ஆபிரிக்காவில் எமக்கு நான்கு தூதரகங்களே உள்ளன. எனவே அங்கு கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாம் கருதுகிறோம். இது ஜெனீவா பிரேரணைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்' என்றார். இதேவேளை, ஜெனீவா பிரேரணை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்தின் பின்னர், ஜெனீவாவில் ஏற்பட்ட பதற்றத்தை தணிப்பதற்கு இந்திய தூதுக்குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் எழுதிய கடிதும் குறித்தும் செய்தியாளர்கள் வினவினர். அப்போது, இந்த முயற்சிகளில் அல்லாமல் இறுதி வாக்கெடுப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார். அத்தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியதன் பின்னர் அவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பது பிரச்சினையில்லை. இறுதி வாக்கெடுப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த உரையின் நேரம், தன்மை, வலிமை என்பன ஜெனீவாவில் புலப்படக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் கூறினார். இந்தியாவின் தீர்மானம் அதிர்ச்சியாக அமைந்ததாகவும் இந்நடவடிக்கையினால் இலங்கை அரசாங்கம் ஏமாற்றமடைந்தாகவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’