விடுதலைப்புலிகள் அமைப்பினை இலங்கைக்கு முன்னதாக இந்தியாவே தடை செய்தது. அது மாத்திரமின்றி புலிகள் அமைப்பையும் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அழிக்குமாறு கூறிய இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் இன்று எமது நாட்டின் மீது யுத்தக் குற்றம் சுமத்துவதாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதியின் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கை தேசிய நீரியல் பொருட்களைப் பயன்படுத்தல் அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் முரளிதரன் இங்கு மேலும் கூறுகையில், இன்று நாம் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பினை சர்வதேச நாடுகள் தான் முதலில் தடை செய்தன. அதில் இந்தியாவே முதன் முதலாக விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர் சர்வதேச நாடுகள் தடை செய்தன. இருப்பினும் உள்நாட்டு விடயம் என்பதால் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை அரசு வழங்கியது. அதற்கும் ஒத்துவராத நிலையிலேயே இறுதியாக இலங்கை அரசு புலிகளை தடை செய்தது. அந்த வகையில் புலிகளுடனான யுத்தமும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் அதன் தலைவர் பிரபாகரனையும் அழிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக கூறி வந்தன. அத்துடன் உதவிகளும் வழங்கின. பல நாடுகள் பிரபாகரனை பயங்கரவாதியாகப் பார்த்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது பிரபாகரனுக்கு மரண தணடனையையும் விதித்தது. இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. கல்வி நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்போன்ற முன்னேற்றங்களை பொறுக்க முடியாத மேற்கத்தேய நாடுகள் எமது நடவடிக்கைகளை சீர்குலைத்துவிடவே முயற்சிக்கின்றன. இலங்கைக்கு பிரச்சினை என்று ஒன்று வருமாயின் அது அனைத்து மக்களையுமே பாதிக்கும். கடந்த காலங்களில் நாம் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்நாட்டில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவில்லை. ஆனால் ஈராக், லிபியா போன்ற நாடுகளில் மனிதப் படுகொலைகள் செய்யப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறுகின்ற போதிலும் அங்கு இன்றும் கூட ஆங்காங்கே தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. எனவே பயங்கரவாதத்தை இல்லாöதாழித்த ஜனாதிபதியின் பயணத்துக்கு எமது ஒத்தழைப்பினை வழங்க வேண்டும். இதனை சகல தலைவர்களிடத்திலும் வலியுறுத்துகிறேன். எமது நாட்டின் இன்றைய நிலைமைகளை சகித்துக் கொள் ளமுடியாததன் காரணத்தினாலேயே நெருக்குதல்கள் வருகின்றன. யுத்தம் முடிவடைந்த ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி என்பது இயல்பானதாகும். இங்கு பொருளாதார நெருக்கடி இருப்பதை ஏற்க வேண்டும். எனினும் சகலரும் இணைந்த இந்த நெருக்கடிகளை வெற்றிக்கொள்ள வேண்டும். எமது நாடு தொடர்பான விடயத்தில் நாம் விழிப்பாக செயற்பட வேண்டியவர்களõக இருக்கின்றோம். ஜெனீவாவுக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கோ நாம் எதிரானவர்கள் அல்லர். இந்த அமைப்புக்களின் கருத்துக்களை நாம் ஏற்கின்றோம். எனினும் எமது தெளிவாகத்தை நாம் கூற வேண்டியுள்ளோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’