வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 மார்ச், 2012

ஜெனீவாவில் மோதல்களை தவிர்த்து, பொன்சேகா உட்பட அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும்; சரத் சில்வா


ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மோதல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் மோதல்களுக்கு பதிலாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறும் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அரசாங்கத்தை ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான இயக்கத்தின் கருத்தரங்கொன்றில் நேற்று உரையாற்றும்போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இவ்வாறு கூறினார். இந்நாட்டில் மனித உரிமைகளோ சட்டங்களோ முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் அவர் கூறினார். அனைத்து சட்டங்களுக்கும் முரணாக முன்னாள் இராணுவத் தளபதியை தடுத்துவைத்திருப்பது சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களுக்கு முரணானது எனவும் இவற்றில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். "சரத் பொன்சேகாவின் கைதானது முறைப்படி மேற்கொள்ளப்படாததால் அது சட்டவிரோதமானது. சரத் பொன்சேகாவை கைது செய்வதற்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் உத்தரவிட்டதால் அது சட்ட விரோதமானது. இராணுவ சட்டத்தின்படி கனிஷ்ட அதிகாரியொருவரை சிரேஷ்ட அதிகாரியொருவர் கைது செய்யலாம். சிரேஷ்ட அதிகாரி ஒழுங்கீனமாக செயற்பட்டால் கனிஷ்ட அதிகாரியும் அவரை கைது செய்யலாம். ஆனால் சரத் பொன்சேகா விடயத்தில் இது பொருந்தாது. ஏனெனில் கைது செய்யப்படும்போது அவர் இராணுவத்திலிருந்து விலகியிருந்தார்" என சரத் என் சில்வா கூறினார். ஜனாதிபதி கையெழுத்திட்ட இராணுவ நீதிமன்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகாது எனவும் சரத் என் சில்வா தெரிவித்தார். இக்கருத்தரங்கில் ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றுகையில், தற்போதைய நிலையில் சர்வதேச சமூகத்தை எதிர்கொள்வதற்கு மிக சிறப்பான நபராக பொன்சேகா விளங்கியிருப்பார் என்றார். 'இம்முக்கியமான தருணத்தில் அவரை அரசாங்கம் சிறையில் வைத்திருப்பது ஏன்? ஏன் அவர்கள் பொன்சேகாவுக்கு அவ்வளவு பயப்படுகிறார்கள்?' என சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உரையாற்றுகையில், பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரமானது 'இரண்டாவது நடவடிக்கை' என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டதை நினைவுகூர்ந்தார். அந்நடவடிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை எனவும் பொன்சேகா அதில் இன்னும் மும்முரமாக உள்ளதாகவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார். புதிய இடது சாரி முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் இதில் உரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’