வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 4 ஆவது மாடியில் உள்ள வீடொன்று எரிந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்த வயோதிபர் ஒருவரும் யுவதி ஒருவரும் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்கப் பிரஜையான பி. கே. சத்தியநாதன் (வயது68), கிளிநொச்சியைச் சேர்ந்த ஷர்மிளா பாலசுப்பிரமணியம் (வயது 32) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் எமது செய்திப்பிரிவுக்குத் தெரித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில ஆதார வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கு தீ வைத்துவிட்டு அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த மாடி வீட்டில் வெடிக்காத நிலையில் மூன்று காஸ் சிலிண்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவற்றை அவர்களே வைத்திருக்கலாம் என்றும் அவை வெடித்திருக்கும் பட்சத்தில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள டொரன்டோ சதுக்க தொடர்மாடி மனையிலேயே இந்தத் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த தொடர்மாடியில் சுமார் எழுபத்தைந்து குடும்பங்கள் வசித்து வருவதுடன் வீடுகள் வாடகைக்கு வழங்கப்படுவதும் வழக்கமாகும். சம்பவதினம் அதிகாலை 2 மணியளவில் நான்காவது மாடியில் தீப்பிடித்ததையடுத்து எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர் மாடியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். ___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’