அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
இதன் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகக்கூடிய நம்பிக்கையை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களைப்பெற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்கு இந்திய அணி இந்த இலக்கை 40 ஓவர்களுக்குள் அடைய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அவ்ணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணியின் சார்பில் திலகரட்ன தில்ஷான் 165 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 87 பந்துகளில் 105 ஓட்டங்களையும் குவித்தனர். இந்திய அணி பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஸா 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஸஹீர் கான் 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் பிரவீன் குமார் 64 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய விதத்துடன் ஒப்பிடும்போது 50 ஓவர்களில் 321 ஓட்டங்களை கடப்பதே அவ்வணிக்கு சிரமமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் 50 ஓவர்களில் அல்ல, 40 ஓவர்களுக்குள் வென்றால்தான் இறுதிப்போட்டிகளுக்கு தெரிவாகும் நம்பிக்கையை நீடிக்க முடியும் என்பதை அவ்வணி அறிந்திருந்தது. இதனால் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் வேமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வீரேந்தர் ஷேவாக் 16 பந்துகளில் 30 பந்துகளில் சச்சின் டெண்டுல்கர் 30 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர். கௌதம் காம்பீர் 64 பந்துகளில் 63 ஓட்டங்களைப்பெற்றார். வீரட் கோலி ஆவேசமாக துடுப்பெடுத்தாடி 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களைக் குவித்தார். இவற்றில் 2 சிக்ஸர்கள், 16 பௌண்ரிகளும் அடங்கும். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் ஆட்டமிழக்காம்ல 40 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சாளர்களில் பர்வீஸ் மஹ்ரூப் 3 ஓவர்கள் மாத்திரம் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்;த்தினார். லஷித் மாலிங்க 7.4 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். வீரட் கோலி இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக தெரிவானார். இத்தொடரில் 19 புள்ளிகளைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. இலங்கை இந்திய அணிகள் தலா 15 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகும். அப்போது இந்தியா தொடரிலிருந்து வெளியேறிவிடும். அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்தாலோ மழை காரணமாக கைவிடப்பட்டாலோ இலங்கை அணிக்கே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும். இரு அணிகள் சம புள்ளிகளை பெற்றால் ... எனினும் அப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால் இலங்கை, இந்திய அணிகள் சமநிலையான புள்ளிகளைப் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் அணி என்பதை தெரிவு செய்வதற்கு சில விதிகள் உள்ளன. முதலாவதாக, இரு அணிகளும் மொத்தமாக பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை கருத்திற்கொள்ளப்படும். அவ்வணிகளின் எண்ணிக்கை சமநிலையில் இருந்தால் குறித்த அணிகளுக்கிடையிலான போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிக்கு என பார்க்கப்படும். அதுவும் அவும் சமநிலையில் இருந்தால் ஓட்ட வீதம் கருத்திறகொள்ளப்படும் தற்போதைய நிலையில் இலங்கை , இந்தியா ஆகிய இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன. எனவே இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிகளில் இந்தியா 2 வெற்றிகளையும் இலங்கை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனால் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை தோல்வியுற்றால் இந்திய அணிக்கே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’