வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஐநா குழுவில் இருந்து சவேந்திர சில்வா விலக்கிவைப்பு


நாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து இலங்கையின் சர்ச்சைக்குரிய இராணுவ மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சர்ச்சைக்குரிய இராஜதந்திரியை தமது நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து விலக்கி வைப்பதாக ஐநாவின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு ஒன்று கூறியுள்ளது. ஐநாவின் அமைதிகாப்பு படையினருக்காக, நாடுகளுக்கு எவ்வளவு பணத்தை வழங்குவது என்று ஆராயும் குழுவுக்கு ஆசிய நாடுகளின் சார்பில் இலங்கையின் ஐநாவுக்கான நிரந்தர துணைத்தூதுவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமர்த்தப்பட்டார். ஆனால், அவர் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக கடந்த வாரத்தில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கவலை வெளியிட்டிருந்தார். இலங்கையில் இராணுவத்தில் இருந்து இராஜதந்திரியாக மாறிய பலரில் சவேந்திர சில்வா மிகவும் சர்ச்சைக்குரியவராகத் திகழ்கிறார். விடுதலைப்புலிகளை 3 வருடங்களுக்கு முன்னர் தோற்கடித்த நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்த 58 வது படைப்பிரிவுக்கு தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவை அவரது சொந்த இணையத்தளம் '' உண்மையான கதாநாயகன்'' என்று வர்ணிக்கிறது. ஆனால், 58 வது படையின் பிராந்தியத்தை நோக்கி சரணடைவதற்காகச் சென்ற பல விடுதலைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாக ஐநாவின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் குழு கடந்த வருடம் கூறியுள்ளது. சவேந்திர சில்வாவும், அரசாங்கமும் அதனை மறுக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு கனடிய இராஜதந்திரியால் தலைமை தாங்கப்படும் ஐநா அமைதிகாப்பு பணிகளுக்கான புதிய ஆலோசனைக்குழு சவேந்திர சில்வாவின் பங்களிப்பு தமது குழுவின் செயற்பாடுகளுக்கு '' பொருத்தமற்றது அல்லது உதவிகரமானது அல்ல'' என்று கூறி தமது நடவடிக்கைகளில் இருந்து அவர் விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சவேந்திர சில்வா, இந்தக் குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், ஆனால் அவருடன் குழுவின் உறுப்பினர்கள் எவரும் பேசவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்றும் ஐநா இராஜதந்திரி ஒருவர் பிபிசிக்கு கூறியுள்ளார். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் நோக்கில் முக்கிய ஆசிய நாடுகள் செயற்படும் நிலையில், இலங்கை சவேந்திர சில்வாவின் நியமனத்தை வாபஸ் பெற மறுப்பதால், இந்த சர்ச்சைக்குரிய நியமனம் குறித்து ஒரு முடக்க நிலை காணப்படுகின்றது. அந்தக் குழுவின் தலைவி லூயிஸ் பிரன்செட் அவர்கள், சவேந்திர சில்வாவுக்கு பகிரங்கமான ஒரு எதிர்ப்பைக் காண்பித்திருக்கிறார் என்றும், சில்வாவை குழுவில் இருந்து வெளியேற்றுவதற்கான அவரது நிலைப்பாட்டுக்கு ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது. தமது முன்னாள் இராணுவ தளபதிக்கு எதிராக அதிருப்திகளை வெளியிடுவது முறையற்றது என்று இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் கூறியிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’