எரிபொருட்களின் விலையேற்றத்தினால் முழு நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினால் ஏனைய துறைகளை சேர்ந்தோர் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று வினவிய ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எரிபொருட்களின் விலைகளைக் குறைக்கவும் இன்றேல் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் என்று அரசாங்கத்திடம் கோரி நின்றார்.
உலக சந்தையின் பிளக்கை கழற்றுவதாக கூறிய அரசாங்கம் முழு நாட்டையுமே விழுங்கி கொண்டிருக்கின்றது. தனக்கு முன்னதாக நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கோரி நின்றார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஊழல் மோசடி மட்டுமன்றி பொருளாதாரத்தை நிர்வகிக்காமையினால் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாத வேளையிலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை இங்கு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள், பயணிகள், தனியார் துறை வாகன சொந்தக்காரர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மின்சாரம், போக்குவரத்து மட்டுமன்றி ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் மக்களின் சொத்தான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் நாசமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. பொருளாதாரம் சரிந்து விட்டது. வாழ முடியாத நிலையில் இருக்கின்ற மக்களை தாச்சியிலிருந்து அடுப்பிற்குள் இழுத்து வீசிய நிலைமையே இன்று ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது அதிகரிக்கும் வகையிலும் குறையும்போது உள்நாட்டிலும் விலைகள் குறையும் வகையில் ஐ.தே.க. வின் ஆட்சியில் சூத்திரம் பயன்படுத்தப்பட்டது. எனினும் இன்று விலைகளை அதிகரிப்பதற்கு மட்டுமே "சூத்திரம்' பயன்படுத்தப்படுகின்றது. ஹெஜிங் ஒப்பந்தத்தினால் விலையை குறைக்க முடியாது என்று அரசாங்கம் பதிலளிக்கின்றது. உலக சந்தையின் பிளக்கை கழற்றுவதாக கூறிய அரசாங்கம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் மக்களையும் விழுங்கி கொண்டிருக்கின்றது. அரசாங்கம் நிவாரணத்தில் மறைந்து கொண்டு பிரச்சினையை தட்டிக் கழிப்பதற்கு முயற்சிக்கின்றது. அரசாங்கம் கூறுவதை போல நிவாரணம் வழங்குவது செயற்பாட்டிற்கு ஒத்துவராது. முச்சக்கர வண்டிகளுக்கு வழங்குவதாக கூறிய நிவாரணத்திற்கு என்ன நடந்துள்ளது. எப்படியாவது மீனவர்களுக்கு நிவாரணம வழங்கப்பட்டு விட்டதாக எடுத்துக் கொண்டால் விவசாயிகள், பயணிகள், அரச ஊழியர்கள், தனியார் வாகன உரிமையாளர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு நிவாரணம் இல்லையா? அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா? அரசாங்கத்தின் ஊழல் மோசடி வீண் செலவுகளின் பாரத்தை மக்களின் மீது சுமத்துவதற்கே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. எரிபொருட்களை மட்டுமின்றி மின்சார கட்டணத்தையும் அதிகரித்தது. இதற்கு எதிராக மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை நடத்தியது. அப்பாவி மக்களை கொன்றொழித்தது. மக்கள் வாழ முடியாது திண்டாடுகின்றனர். மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் இன்றேல் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி நின்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’