வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 பிப்ரவரி, 2012

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அனைவரதும் பங்களிப்பு அவசியம்! ஜனாதிபதி வலியுறுத்தினார்


நாட்டின் இனப்பிரச்சினை தீர்வில் ஜனாதிபதி மட்டுமல்லாமல் அரசியல் வாதிகள் புத்திஜீவிகள், கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கேட்டுக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
சாவகச்சேரி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதி கட்டடத் தொகுதி மற்றும் வைத்தியர்களது விடுதியை இன்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்திற்கு இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை வழங்குவதற்கான கடப்பாடு எமது அரசுக்குள்ளது என்பதுடன் மென்மேலும் சுகாதாரத்துறை கல்வி மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதில் அக்கறை செலுத்தி வருகின்றோம். இவ்வாறான அபிவிருத்தித் திட்டஙகள் மூலம் வடமாகாணம் மட்டுமல்லாமல் முழு நாட்டு மக்களுமே சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். நாம் உதவிகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கும் போது இனம் மதம் மொழி என்ற வேறுபாடுகள் இல்லாமலும் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று நோக்காமலுமே மேற்கொண்டு வருகின்றோம். முன்னர் ஒரு தடவை நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தபோது எனக்கு நினைவுப் பரிசொன்றைத் தந்திருந்த வேளையில் நான் அவர்களிடம் எல்லா மக்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்ந்தால் அதுவே போதும் என்று வலியுறுத்திக் கூறினேன் என்று கூறிய ஜனாதிபதி அவர்கள் இதை அனைத்து அரசியல் வாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் இந்நாட்டில் உள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதி என்ற வகையில் என்னால் மட்டும் தீர்வு காண முடியாது. மாறாக அரசியல் வாதிகள் புத்திஜீவிகள் கல்விமான்கள் வைத்தியர்கள் துறைசார்ந்த அதிகாரிகள் இவர்களுடன் முக்கியமாக ஊடகவியலாளர்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டு;க் கொண்டார். இங்குள்ள சில அரசியல் வாதிகள் இனவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் அதேவேளை பத்திரிகைகளும் அதற்கு துணைபோகின்றன என்று சுட்டிக்காட்டியதுடன் ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்களையும் உண்மைத் தன்மையோடு வெளியிட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை குழப்புவது மட்டுமல்லாமல் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளும் தடைப்பட வேண்டிய அவலம் ஏற்படுமென்றும் இதை விடுத்து எல்லோரும் ஒற்றுமையாக வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதும் ஊடகங்களின் கடமை என்றும் சுட்டிக் காட்டினர். இந்நாட்டில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும் அவற்றைப் பேசித் தீர்ப்பதற்கு அரசியல் வாதிகள் சிலர் விரும்புவதில்லை. மாறாக அரசாங்கத்தால் செய்ய முடியாத கோரிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுடன் இதன் மூலமே அவர்களது அரசியலில் அவர்களால் நிலைக்க முடியும் என்றும் நினைக்கின்றார்கள். அந்த வகையில்தான் எமது அரசு பிரிவினை வாதங்களுக்கு இடங்கொடாமல் தீர்வு காண வேண்டும் என்பதை கருத்திக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் அபிவிருத்தி திட்டங்களுக்கென அதிகளவு நிதியினை வடமாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வடமாகாணம் துரித கதியில் அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கும் நிச்சயம் உரிய வகையில் தீர்வு காணப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கென 158 மில்லியன் ரூபா செலவில் விடுதி கட்டிடத் தொகுதியும் வைத்தியர் விடுதியும் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் இம்மாவட்டத்தின் சுகதாதாரத் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கத் தயார் என்றும் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளும் கரம்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது இம்மாவடட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறையும் அன்பும் கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதேபோன்று அமைச்சர்களும் வருகை தருவதாகவும் இந்நிலை முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டினார். அரசியல் வாதிகள் சிலர் இங்கு மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கிக் கொண்டு அதில் தமது அரசியலை நடத்த விரும்புகின்றனர் என்பதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான இந்த அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், பலமுள்ள அரசினால்தான் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதுடன் அந்த வகையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு 06 மாத கால அவகாசம் வழங்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தற்போது அதனை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றினார். முன்பதாக பிரதான வாயிலில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியேரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்று நிகழ்விடத்து அழைத்து வந்தார். அங்கு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நோயாளர் விடுதி கட்டடத் தொகுதியும் வைத்தியர் விடுதியும் பின்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் பாரூக் யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்ட சுகதாரத்துறை சார்ந்தவர்களும் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோரும் கலந்து கொண்டனர் இதனிடையே மாகாண வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவ மாதுக்களுக்கு மோட்டார் சைக்கிள்களையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.

























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’