ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த நினைவுச் சிலையொன்றை பெற்றோல் குண்டு வீசி சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள் காலை 10 மணியளவில் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். இவ்வார்ப்பாட்டமானது ஹவ்லொக் வீதியினூடாக நகர்ந்து காலி வீதியை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பல்வேறு வாசகங்களை பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என்.எல்.ஏ கருணாரத்தனவை பதவி விலகுமாறும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி வீதியினூடாக அலரிமாளிகை நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களைத் தடுத்து நிறுத்தும் முகமாக கொள்ளுப்பிட்டி மல்சந்தியில் பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் அப் பகுதியில் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததோடு தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. காலை 10 மணியளவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் ஆர்பாட்டமானது சுமார் பகல் 1 மணியளவில் கொள்ளுபிட்டி மல்சந்தியை அடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் காலி வீதி முற்றாக மூடப்பட்டிருந்தது. இதனால் காலி வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிகளில் அனுப்பப்பட்டன. இதனால் பம்பலபிட்டி முதல் கொள்ளுபிட்டி வரையிலான பாதையில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாயினர். பகல் ஒரு மணியளவிலிருந்து சுமார் ஒரு மணித்தியாலம் கொள்ளுபிட்டி மல்சந்தியில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கொட்டும் மழையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மாணவர் ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் உரை நிகழ்த்தினர். சுமார் 2.45 மணிளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பகிடிவதைகளைத் தடுப்பதற்காக கண்காணிப்பாளர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே பகிடிவதைக்கு சார்பான அல்லது அதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவை எதிர்ப்பவர்களே குறித்த பெற்றோல் குண்டு வீச்சை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு வீச்சுத் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’