அரசியல் தீர்வு விடயத்தில் எம்மிடம் தெளிவான கொள்கையும் திட்டமும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (24) இடம்பெற்ற வன்னித் தொண்டர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நியாயமான தேவையின் அடிப்படையில்தான் உங்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக அரசு அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த கால தவறான அரசியல் வழிநடத்தல் காரணமாகவே எமது மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பையும், அழிவையும் சந்தித்திருந்தனர் என்பதுடன் அவ்வாறான அரசியல்வாதிகளிடம் இன்றும் கூட சிறந்த கொள்கையோ திட்டமோ இல்லை என்று கூறிய அமைச்சர் அவர்கள் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மிடம் ஒரே நிலைப்பாடான தெளிவான கொள்கையும் திட்டமும் இருக்கின்றது என்றும் சுட்டிக் காட்டினார். அதேநேரம் தொழிலுக்காக மட்டுமல்லாமல் சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும் அபிவிருத்திக்காகவும் உழைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்பதுடன் அதற்கமைவாக உங்களது திறமைகளை மேலும் வளப்படுத்தி எதிர்காலத்தில் வளமானதொரு கல்விச் சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் இன்றைய சூழலைப் பாதுகாத்துக் கொண்டு அதனை வளர்த்தெடுத்து அதிலிருந்து முன்னேறுவதே சிறந்த வழிமுறையாகும் என்றும் சுட்டிக்காட்டினார். அடுத்த சந்திப்பின் போது தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் நிச்சயம் சாதகமான பதில் தரப்படுமெனவும் அதுவரையில் நம்பிக்கையுடன் கடமையாற்றுமாறும் பலத்த கைதட்டலுக்கு மத்தியில் அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் வன்னி மாவட்டங்களில் பல தொண்டர் ஆசிரியர்கள் நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வேதனங்களை பெற முடியாதிருந்த போதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை போற்றுதற்குரியது. இந்நிலையில் கடந்த காலங்களில் வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது வன்னி பிரதேசத்தில் கடும் யுத்தம் நிலவிவந்ததால் அவர்கள் நியமனம் பெறமுடியாது போனதையிட்டு நாம் மனம் வருந்துகின்றோம். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நிலவிவரும் இயல்புச் சூழலில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பலர் இக்கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சர் அவர்கள் மேற்கொண்டார். இதற்கான சாதகமான தீர்வினை அரசாங்கத்திடமிருந்து மிக மதிநுட்பமான அரசியல் அணுகுமுறையினூடாகவே பெறவேண்டிய கள யதார்த்தம் எமது பகுதிகளில் நிலவி வருகின்றது. அதாவது இன்று வடமாகாணத்தில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையுடன் நோக்குகையில் மேலதிகமான ஆசிரியர் வளத்தினையே எமது பகுதிகள் கொண்டுள்ளன. இருப்பினும் அந்தந்த பகுதி ஆசிரியர்கள் உச்சபயனை அடைவார்கள் என்ற நியாயத்தின் அடிப்படையிலேயே நாம் அரசாங்கத்திடம் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தோம். அத்தோடு இவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நியமனம் என்ற கருத்தை நாம் வலியுறுத்தினோhம். இவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார். இதேவேளை இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகவே இன்று நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். நிகழ்வில் வன்னித் தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் 05 வலயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உரையாற்றும் போது தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் மட்டுமல்லாமல் வடபகுதி மக்களது அபிவிருத்தி மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்தும் உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் ஏனைய அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்ற போதிலும் சொன்னதையே செய்பவராகவும் செய்வதையே சொல்பவராகவும் மக்களுக்கான பணிகளை முன்னெடுத்து வருபவர் அமைச்சர் மட்டுமே என்றும் சுட்டிக் காட்டினர். இதன்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் கல்வித் துறைசார்ந்தோரும் கிளிநொச்சி முல்லைத்தீவு துணுக்காய் மடுவலயம் வடமராட்சி கிழக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 500க்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’