நாட்டில் கடந்த காலங்களில் நடை10பெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது அந்த நிலை மாற்றமடைய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார். தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கப்புறுக புரவர (தென்னைக்கிராமம்) வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசத்துக்கான இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் விழா இன்று நடைபெற்றது. சந்திவெளியிலுள்ள வேல் தோட்டத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரதேசங்களின் கட்டுமானங்களையும் பாதைகளையும் அமைத்துத் தருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்துவதன் மூலமே நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அத்துடன் பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்யமுடியும். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிகமான புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு பாரம்பரிய முறைகளைக் கைவிட்டதும், இரசாயனக் கலவைகளால் உருவான பானங்கள், உணவுப் பொருள்கள் உண்பதுமே காரணமாகும். தென்னை என்பது ஒரு பிள்ளை போன்றது. முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம் பொன்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர். தென்னை என்பது பல்வேறு பட்ட வகைகளிலும் எல்லா வகையானவற்றுக்கும் உதவி செய்கின்ற பயன்படுகின்ற ஒரு விடயமாகும். அந்த வகையிலேயே நமது நாட்டின் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார். இந்நிகழ்வில், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நயினி பண்டார, தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பொது முகாமையாளருமான டி.எம்.எல்.பண்டார, வேல் தோட்ட உரிமையாளர் திருமதி வேலுப்பிள்ளை, வைத்தியக்கலாநிதி ரவிக்குமார், மற்றும் அதிகாரிகளும் கப்புறுக்க சங்கங்களின் அங்கத்தவர்கள், மகா சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது செயல்முறை விளக்கமளிக்கும் வகையில் தெங்கு உற்பத்திகள் தொடர்பான காட்சிப்படுத்தல்கள், கண்காட்சியும் நடைபெற்றது. கயிறு திரிப்பதற்கான இயந்திரம், மற்றும் தெங்கு உற்பத்திகளுக்கான உபகரணங்கள், தென்னங்கன்றுகள், சங்கங்களுக்கான நிதியுதவிகள், சங்கங்களின் பதிவுச் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’