ஆரையம்பதி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி முயற்சியாகவே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை காத்தான்குடி பக்கமாக இருந்து ஒரு மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் இந்த உருவ சிலையினை சேதப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யார் இதை செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் என்பவரின் போதனைகளை தமிழ் மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவையல்ல. அவர் சகல மதங்களினாலும் மத தலைவர்களினாலும் போற்றப்படுகின்ற ஒருவர்.
அவரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த உருவச்சிலை வைக்கப்பட்டு ஒரு சில தினங்களே ஆகுகின்றன.
தற்போது இந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இன ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சதி வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
அதில் ஓரு நடவடிக்கையாகவே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதையும் நாம் பார்க்கின்றோம் என்றார்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கருத்து தெரிவிக்கையில்,
யார் இதை சேதப்படுத்தியிருந்தாலும் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். உரியவர்களை அடையாளப்படுத்தி பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இந்த உருவ சிலையானது ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலை யார் செய்திருந்தாலும் அதை காத்தான்குடி நகர வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’