இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இனப் பிரச்சினைக்கு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று முடிவு எடுப்பதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேசமயம், இலங்கை அரசின் எண்ணத்திற்கு ஏற்றவாறு அத்தகைய முடிவு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை உள்ளடக்;கிய ஒன்றாக இருக்கவேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு முதல் நாள், அமைச்சர் கிருஷ்ணா - தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் பேசியுள்ளார். அப்போது, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பது இந்தியாவின் கடமை என்று கூட்டணி தலைவர்கள் கூறியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்துள்ளன. இதே நிலையை சிங்கள இன மக்களின் அரசியல் கட்சிகளோ, இலங்கை அரசோ எடுக்காவிட்டாலும், இனப் பிரச்சினை தீவிரம் அடைந்து இனப் போராக மாறுவதற்கு இந்தியாதான் காரணம் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் இன்னமும் நிற்கின்றனர். சிங்கள பேரினவாதிகளைப் பொறுத்தவரையில், எண்பதுகளில் இந்தியா, தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி வழங்காதிருந்திருந்தால், விடுதலைப்புலிகள் இயக்கம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது என்ற நிலைப்பாட்டிலேயே இன்னமும் இருக்கின்றனர். இந்த போராளிக் குழுக்கள் எல்லாம் எழுபதுகளிலேயே அதிரடி செயற்பாட்டில் இருந்தன. அவற்றில் சில பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் தொடர்பிலும் இருந்தன. கடந்த 1975ஆம் ஆண்டு, அல்பிரட் துரையப்பா கொலைச் சம்பவத்தோடு, விடுதலைபுலிகள் இயக்கமும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட பிரபலமாகிவிட்டனர். புpரபாகரனை பிடிக்கத்தான் பாஸ்தியான் பிள்ளை என்ற பொலிஸ் அதிகாரி அனுப்பப்பட்டார் என்பதும் நிகழ்கால சரித்திரம். பிரபாகரனின் மன உறுதியை இப்போதும் மெச்சுபவர்கள், இந்தியாவின் உதவியில்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வழிமுறைகளில் வெற்றிபெற்றிராது என்று இன்னமும் கருதுவது, சிறுபிள்ளைத் தனமானது. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையிலும், பேச்சுவார்த்தை என்று ஆனபிறகு தாங்கள் கேட்பது அனைத்துமே கிடைக்கவேண்டும் என்று அதன் தலைமை எதிர்பார்ப்பது தவறான அணுகுமுறை. இதுவே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அணுகுமுறையாக இருந்தது. தற்போது இனப்போர் ஒரு முடிவிற்கு வந்தபின்னர். கூட்டணியின் தந்திரோபாயமும் அதனோடு ஒட்டியே உள்ளது. இது நல்லதொரு முடிவிற்கு கட்டியம் கூறும் வழிமுறை அல்ல. ஏதோ, இனப்போரின் கடைசிக் காலகட்டத்தில் இந்தியா வாளாக இருந்ததாகவும், அல்லது இலங்கை அரசோடு கைகோர்த்து இருந்ததாகவும் போன்ற பிரசாரம் இன்றளவும் செய்யப்பட்டுவருகின்றது. ஒவ்வொருமுறையும் போரை தொடங்கும் போது விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவை கலந்து ஆலோசிக்கவில்லை. இந்திய அரசிடம் போர் தொடங்குவது குறித்து முன்னறிவிப்பு எதுவும் கொடுத்ததும் இல்லை. ஆனால், போரில் தோல்வியை தழுவும் காலகட்டத்தில் மட்டும் இந்தியா திடீரென்று அவர்களது நினைவிற்கு வந்துவிடுவதுண்டு. அதுவும் ஒரு 'தமிழினத் துரோகி' என்ற பிரசார உத்தியின் ஒருபகுதியாக மட்டுமே. எப்போது பாலசிங்கத்தின் மரணத்திற்கு பின்; ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டிய 'கே.பி' விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகமாக சர்வதேச சமூகத்தின் முன் தோன்றியபோதே, இந்தியாவிற்கு தவறான ஒரு 'சிக்னல்' கொடுக்கப்பட்டுவிட்டது. இது கடைசிவரையிலும் மாற்றப்படவில்லை. அதுபோன்றே, அந்த இயக்கம் இந்திய அரசை அணுகுவதற்காக தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு இந்திய அரசின் வரைமுறைகளும் நெறிமுறைகளும் கூட தெரிந்திருக்கவில்லை. அன்றும் சரி இன்றும் சரி, இந்த இரு சாராரும் போரின் கடைசிக் கட்டத்தில் போரை நிறுத்துவதற்கு இந்தியா எடுத்த நன்முயற்சிகளை ஒப்புக்கொண்டு அதன் அடிப்படையில் புது டெல்லியுடனான பேச்சுவார்த்தைகளை தொடரமுயலவில்லை. உதாரணத்திற்கு, 2009ஆம் ஆண்டு மே மாதம் 1-13 திகதிகளிடையே இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இலங்கை அரசு நடைமுறைப் படுத்திய போர்நிறுத்தம். அதன் பயன் அப்பாவி தமிழ் மக்களை சென்றடையவில்லை என்பது வேதனைக்குரியது. தற்போதைய சூழ்நிலையில், அமைச்சர் கிருஷ்ணா இலங்கை செல்லும் முந்தைய நாள், தமிழ் தேசிய கூட்டமைப்பு - கற்றுக்கொண்ட பாடங்கள் குழுவின் அறிக்கை குறித்த தனது விளக்கங்களை அளித்திருப்பதும் இந்தவகையிலேயே சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படும். அரசு குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு வாரங்கள் உருண்டோடிய பின்னர் கூட்டமைப்பின் 115 பக்கம் கொண்ட அறிக்கைக்கு அத்தகைய முக்கியத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. அந்தவகையில் கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள சமயமானது இந்தியாவை இலங்கை தமிழ் அரசியல் தலைமை பொருட்படுத்தவில்லை என்ற எண்ணத்தையே உருவாக்கும். இதனால் கூட்டமைப்பிற்;கோ தமிழ் மக்களுக்கோ அதிகப்படியான பயன் எதுவும் கிடைத்துவிடும் என்று கருத இடம் இல்லை. பொலிஸ் மற்றும் நிலம் குறித்த உரிமைகள் பிராந்திய அரசுகளுக்கு வேண்டும் என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதேசமயம், நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் அந்த அதிகாரங்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் குறிப்பாக பிராந்திய அரசுகளுக்கு, பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் மேலதிகமான அதிகாரங்கள் வேண்டும் என்றால் அது நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதின்மூன்றாவது சட்டதிருத்தத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றவர்கள் தற்போது பொலிஸ் மற்றும் காணி குறித்த அதிகாரங்களுக்கு மட்டும் அதனை ஏற்றுக் கொள்வோம் என்று கூறுவது ஏற்புடையதா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். கூட்டணி தலைமை ஆகட்டும், சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் ஆகட்டும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதாலும் தொடர்ந்து பதவியில் இருப்பதால் மட்டுமே அதிபர் ராஜபக்ஷ தன்னால் நினைத்த காரியங்களை சாதித்துவிடமுடியும் என்று எண்ணுகிறார்கள். தற்போதுள்ள ஆளும் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறுதரப்பட்ட அரசியல் மற்றும் சமுதாய பின்னணியிலிருந்து வந்துள்ள தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஜனாதிபதி ராஜபக்ஷ மீதான மரியாதையை விட, பயத்தைவிட, அரசியல் மாற்றத்திற்கான காரணங்களும் காரணிகளும் கண்ணில் இன்னும் புலப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருசிலர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். இந்தஉறுப்பினர்கள் எதிர்பார்க்கும் காரண - காரணிகளை வழங்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கில் ஆளும் கூட்டமைப்பு தலைமை செயல்பட்டுவருகிறது. அதில் முக்கியமான ஒன்றே, அதிகார பகிர்வு என்பதாகும். நான்கு அரசியல் கட்சிகளையும் கட்சி சாராத பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைக்கு இந்த பிரச்சினை புரியாத விடயமல்ல. நாட்டின் கடந்த முப்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றையும் ஜனாதிபதி மஹிந்தவின் அணுகுமுறையையும் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்த பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களும் ஆழமும் நன்கு விளங்கும். இந்த பின்னணியில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் பிரச்சினைக்கான முடிவை நோக்கி நகர்வது அரசின் இராஜதந்திர செயல்பாடாகவே கருதப்படவேண்டும். கூட்டமைப்பு கூறுவதுபோல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருந்தால், முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்களுக்கான அதிகார பகிர்விற்கு யார், எங்கே, எப்படி அச்சாரம் கொடுப்பது? மேலும் அத்தகைய முடிவுகள் நாடாளுமன்றத்தின் முன்னர் வைக்கப்படும் போது 'சந்திரிகா தீர்வை' செல்லா காசாக்கியதுபோல் இப்போதும் எதிர்கட்சிகள் செய்ய முயலாது என்று கூற முடியாது. அதுவே ஆட்சியாளர்களின் நாடாளுமன்ற பெரும்பான்மையை பதம்பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. அன்று, சிங்கள பேரினவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் சமூகத்தை மீண்டும் ஒருமுறை வஞ்சித்துவிட்டார்கள் என்று முறையிட முடியாது. தேர்தல் சார்ந்த ஜனநாயக அரசியலில் இதுவெல்லாம் பாலபாடம். ஜனாதிபதி மஹிந்தவை பொறுத்தவரை, பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை விட பிரசார உத்திகளுக்கு அதிகநேரம் செலவிடுகிறார் என்ற எண்ணம் உருவாகிவருவது துர்பாக்கியமான நிலைமை. அமைச்சர் கிருஷ்ணா வரவை ஒட்டி ஜனாதிபதி மஹிந்த கொண்டாடிய பொங்கல் விழா இந்த பட்டியலில் அடங்கும். ஆனால், பிரசாரத்திற்கு பிரசாரம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்திகளை முறியடிக்க முடிந்ததால் மட்டுமே அவரது தலைமையால் அவர்களை போரிலும் வெல்வது சாத்தியமானது. ஆனால் அதுமட்டுமே போதும் என்று கருதி இருந்துவிடமுடியாது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை அரசு எங்கே அவ்வாறான போக்கில் இருக்கிறதோ எந்த எண்ணமே சர்வதேச சமூகத்தை 'போர்க் குற்றம்'; போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தத் தூண்டியது. கிருஷ்ணாவின் விஜயம், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐநா மனித உரிமை குழுவின் கூட்டத்திற்கு முன் நிகழ்ந்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் அறிவுரையை நடப்பாற்றுவது குறித்து இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்புகளையும் அதன் நடைமுறை சாத்தியங்களையும் எடைபோடுவதற்கு இந்த விஜயம் பயன்படும். அந்தவிதத்தில், மார்ச் மாதத்திற்குள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெறுவதே கூட்டணியின் தற்போதைய அரசியல் தந்திரமாக இருக்கவேண்டும். அதற்கு, கூட்டணி நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிப்பதே சரியான முறையாக இருக்கும். அவ்வாறு நிகழும் பட்சத்தில், பின்னர் ஏற்படும் பாதிப்புகளுக்கு இலங்கை அரசும் சிங்கள அரசியல் கட்சித் தலைமைகள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிவரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’