வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஜனவரி, 2012

கனடாவுக்கு செல்ல முயன்ற 200 இலங்கை தமிழர்கள் டோகோ தடுப்பு முகாம்களில்


ட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள், மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவிலுள்ள தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பினூடாக இலங்கைக்குத் திரும்பியதையடுத்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
'டோகோ' நாட்டின் தலைநகரான 'லோமோ'விலுள்ள தடுப்பு முகாமொன்றிலேயே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அம்முகாமிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் தெரிவித்தார். அவர் தெரிவித்த தகவலின்படி, சுமார் 200 இலங்கையர்கள் டோகோ நாட்டில் தங்கியிருப்பதற்கான விஸா முடிவடைந்த நிலையில் அந்நாட்டு பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கடந்த நவம்பர் மாதம் 20ஆந் திகதி அதிகாலை அவர்கள் தங்கியிருந்த ஐந்து வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'கனடாவில் சட்ட ரீதியான வேலைவாய்ப்பு பெறுவதற்கெனக் கூறி கடந்த செப்டெம்பர் 28ஆம்; திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நாம் புறப்பட்டோம். எமது குழுவில் ஐந்து பேர் இடம்பெற்றிருந்தனர். விமான நிலையத்தில் வைத்தே கடவுச்சீட்டு, மற்றும் பயணச்சீட்டு உட்பட பயண ஆவணங்களை பயண முகவர் சமர்ப்பித்தார். டோகோ நாட்டிற்கு சுற்றுலா விஸாவில் சென்று அங்கிருந்து கனடாவுக்கு பயணம் செய்யலாம்' எனக் கூறப்பட்டது. டோகோவை சென்றடைந்தபோது விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரஜையுடன் எமது நாட்டைச் சேர்ந்த ஒருவரும் எங்களை வரவேற்று கடவுச்சீட்டை பெற்று ஒரு வாரகால விஸா பெற்றுத்தந்த பின்பு அந்நாட்டு பிரஜையிடம் எம்மை ஒப்படைத்தார். அவர் எம்மை வீடொன்றில் தங்கவைத்தார். இன்னும் பலர் அங்கு தங்கியிருப்பதை அங்கு சென்றபின் அறிந்தோம். எமக்குப் பின்னரும் மேலும் பலர், குடும்பமாகவும் தனியாகவும் வந்துகொண்டிருந்தார்கள். நாம் இருந்த ஐந்து வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டபோது 10 மாத குழந்தை உட்பட மேலும் சில குழந்தைகள், பெண்கள் என 209 பேர் கைதுசெய்யப்பட்டு குறித்த தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இவர்களில் நான்கு முஸ்லிம்களைத் தவிர ஏனையோர் தமிழர்கள். மூன்று மாதம் தொடக்கம் ஒரு வருடத்திற்குமேல்வரை அவர்கள் அந்த வீடுகளில் தங்கியிருந்தார்கள் என எங்களால் அறிய முடிந்தது. பிரதான முகவரை எமக்குத் தெரியாது. ஆனால், அவரது ஆட்களை தெரியும். கனடாவுக்கான பயணம் இப்படி தாமதிப்பது குறித்து கேட்டால் விமானத்தில் அல்ல, கப்பலில்தான் பயணம் எனக் கூறப்பட்டது. கானா நாட்டினூடாக பயணம் இடம்பெறும். இதற்காக கப்பல் வாங்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் சேரும்வரை காத்திருக்க வேண்டும் என கூறுவார்கள். நாங்கள் நாடு திரும்புகிறோம் என்று கூறினால் மிரட்டுவார்கள். நாங்கள் வெளியே நடமாட முடியாதவாறு வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். போதிய அடிப்படை வசதிகள் இல்லை. போதிய உணவு இல்லை. சாப்பிடுவோம். குழந்தைகள் உட்பட பலர் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. பொதுவாக அங்கு மலேரியா காய்ச்சல் பெரும் பிரச்சினையாக உள்ளது. தற்போது தடுத்து வைக்கப்பட்ட இடத்தில்கூட இப்படியான பிரச்சினைகள் உள்ளன. அந்த இடம் கைவிடப்பட்ட இராணுவ முகாம். இப்போது குதிரைகள் கட்டுமிடம். வெயிலிலும் பனியிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒரு மாதத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நாங்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க முடியாத நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம். அந்நாட்டில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இல்லை. அது வறிய நாடு ஆகும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஆகியவற்றின் உதவிக்கு குரல் எழுப்பினோம். நைஜிரியாவிலுள்ள சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு பிரதிநிதியொருவர் வருகைதந்து எங்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து நாடு திரும்ப விரும்புவர்களுக்கு அந்த ஏற்பாடுகளை செய்து தருவதாக அளித்த உத்தரவாதத்தின் பேரில் முதற்கட்டமாக நாங்கள் ஒன்பது பேர் நாடு திரும்பியுள்ளோம். அனேகமானோர் நாடு திரும்ப விரும்பியிருந்தாலும் முகவரிடம் செலுத்திய பணத்தை எப்படி மீளப்பெறுவதென புரியாமல் குழம்பிப்போயுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஆவணஙகள் இல்லாத காரணத்தினால் பொலிஸில் கூட இதுதொடர்பாக முறைப்பாடுகளை செய்யமுடியாத நிலையில் உள்ளோம். இந்த பயணம் தொழில் வாய்ப்புக்கான சட்ட ரீதியான பயணம் என்ற நம்பிக்கையில்தான் நான் இந்த பயணத்தை நாடினேன். இப்படி சட்டவிரோதமான ஆபத்துமிக்க பயணமென தெரிந்திருந்தால் இந்த பயணத்தை நாடியிருக்க மாட்டேன்' என்றார். டோகோ தடுப்பு முகாமில் தங்கியிருந்து நாடு திரும்பிய மற்றொரு நபர் கூறுகையில், 'செப்டெம்பர் மாதம் விமானம் மூலம் 'டோகோ' நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டோம். நான் அந்த நாட்டைச் சென்றடைந்து ஒருவார காலத்தின் பின்னர் என்னை கனடாவிற்கு அனுப்பிவிட்டதாக கூறி, எனது தாயையும் சகோதரியையும் இங்கிருந்து டோகோவுக்கு அனுப்பினர். இதனை நான் அறிந்திருக்கவில்லை. வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களுடன் ஒருவாரகாலத்தின் பின்னர் ஒரு தடவை தொலைபேசியூடாக உரையாட தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. சுற்றிவளைப்பின் போது கைதாகி குறித்த முகாமிற்கு அழைத்துவரப்பட்ட பின்புதான் எனது தாயையும் சகோதரியையும் நேரில் கண்டேன். அவர்களுடன் அந்த முகாமில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்த நான் இப்போ நாடு திரும்பியுள்ளேன். எனது தாயும் சகோதரியும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களின் சுகயீனம் காரணமாக என்னுடன் நாடு திரும்பவில்லை. அடுத்த தொகுதியினருடன் அவர்கள் நாடு திரும்புவார்கள்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’