வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 டிசம்பர், 2011

பொன்சேகா மன்னிப்புக் கோர வேண்டுமென்பது நகைப்புக்குரியது; கே.பி., கருணா கோரினரா?


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமானால் அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என அரசாங்கம் கூறுவது நகைப்புக்குரியது. அப்படியானால் கே.பி., கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் மன்னிப்புக் கேட்டுத்தான் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனரா என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
சரத் பொன்சேகா எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இதனையே மக்களும் விரும்புகின்றனர் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியதுடன் பொன்சேகாவின் விடுதலை குறித்தும் வலியுறுத்தினார். அவர் இங்கு மேலும் கூறுகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சி பாடுபட்டு வருகின்றது. நாட்டை மீட்டுத் தந்த சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளின் தலைவர்களாக செயற்பட்ட கே.பி., கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோர் இன்று அரச மாளிகையில் இருக்கின்றனர். பொன்சேகாவின் விடுதலை குறித்து பேசுகையில், பொன்சேகா மன்னிப்புக் கோர வேண்டும் என்று அரசாங்கம் கூறுகின்றது. இது நகைப்புக்குரிய விடயமாகும். ஏனெனில் மேற்கூறப்பட்ட பயங்கரவாதத் தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலாவது மன்னிப்புக் கோரியுள்ளனரா? அவர்களுக்கு அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பை வழங்கியிருக்கிறதா எனக் கேட்க விரும்புகிறேன். இந்நிலையில் சரத் பொன்சேகா எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்? அதற்கான எந்த தேவையும் கிடையாது. சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்துள்ள அரசாங்கம் பயங்கரவாதத் தலைவர்களை அரச மாளிகையில் வைத்துக் கொண்டிருப்பதும் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதும் நியாயமானது தானா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’