உழைப்பால் உயர்ந்து தம் சொந்தக் காலில் தம் இருப்பையும் வாழ்வையும் தாமே தீர்மானிக்கும் திறன் கொண்ட எமது தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் எம் மக்கள் மத்தியிலான போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவனையானது எதிர்கால சந்ததியின் வளர்ச்சியில் ஏற்படுத்தப் போகும் பாதகமான நிலைமைகளை தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மோதல்கள் நிலவிய 30 ஆண்டு காலத்தின் போதும் அதற்கு முன்னரும் கூட தமிழ் மக்களிடையே இந்தப் போதைப்பழக்கம் மிக மிக அரிதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அல்லது இல்லையென்றே கூறிவிடலாம். ஆனால் போதைப்பொருள் விநியோகம் சில அரசியல்வாதிகளால் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க செய்தியாகும். அண்மையில் யாழின் பிரபலமான கல்லூரி ஒன்றின் மாணவர்கள் போதைப் பொருட்களுடன் கைது மன்னாரில் தமிழ் அரசியல் வாதியொருவர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒன்றரைக் கிலோ போதைப் பொருளுடன் இரு படகுகள் சுற்றி வளைப்பு யாழ் நகரில் 28 பைக்கற்றுகளில் பொதி செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் நேற்று (5) இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது என செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. வெளிவந்த வண்ணமிருக்கும் இவ்வாறான தகவல்கள் யாழ் சமூகம் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் ஆபத்தை முன்னறிவிக்கின்ற செய்திகளாகும். எமக்குகிடைக்கின்ற தகவல்கள் பற்றிய அவதானிப்பில் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோர் குடாநாட்டு மக்கள் மத்தியில் இப் போதைப் பொருட்களை பாவனைக்காக ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது குடாநாட்டில் விரிந்து பரவும் இந்தப் போதைப்பொருள் விற்பனையின் நோக்கம், அது ஏற்படுத்தப் போகும் விளைவுகள் இவற்றை கடத்தி விற்பனை செய்வோரின் பிண்ணணிகள் என்பவற்றை ஆராய்ந்து இதனை தடுப்பதற்கான முறையான வேலைத்திட்ட முறைமையொன்றை எம் மக்கள் மத்தியில் இயங்கி வரும் சிவில் அமைப்புக்கள் சீராக முன்னெடுப்பதன் மூலமே இதனைத் தடுத்து நிறுத்த முடியும். இது விடயத்தில் பொதுமக்கள் தாமகவே முன்வந்து ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டான செயற் திட்டமொன்று அவர்களால் இனங்காணப்படாதவரை மக்கள் மத்தியில் இருந்து போதைப்பொருள் பாவனையை வேரோடு களைவதென்பது இயலாத காரியமாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளால் முன்னெடுக்கபபடும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து கிராமங்களிலும் விரிவாக முன்னெடுக்க அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். போதைப்பொருள் பாவனையின் சமூகப் பின் விளைவுகள் பற்றிய அவதானிப்பில் தனி மனித உடல் உள நலக்கேடு என்பதற்கப்பால் பாதகமான சமூக பொருளாதார விளைவுகளையும் போதைப்பொருள் பாவனைக்குள் தள்ளப்படும் ஒரு சமூகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. மக்களிடையே அதி உச்ச வருமான செயற்பாடாக போதைப்பொருள் விற்பனை நோக்கப்படும் இன்றைய நிலையில் பெரும் பணமீட்டும் நோக்குடன் பாமர அடிநிலை வறிய மக்களும் போதைப் பொருள் விநியோகம் மற்றும் பாவனைக்குள் உள்ளீர்க்கப்பட்டு விடுகின்றமை ஆபத்தான சமூகச் சீரழிவின் ஆரம்பம் என்பதனை நாம் நற்குணர்ந்து கொள்ள வேண்டும். இதனுடன் இணைந்ததாக போதைப்பொருள் வர்த்தகம் மூலமான அதிகளவிலான பணப்புழக்கமானது நகரம் - கிராமத்துக்கிடையிலான வர்த்தகத்தில் செயற்கையான மிகைப் பணப்புழக்கத்திற்கு வழியேற்படுத்தி பணவீக்கத்தின் பாதகமான விழைவுகளை மக்கள் அனுபவிப்பதற்கும் போதைப்பொருள் வர்த்தகம் வழியேற்படுத்தி விடுகின்றதென்பதும் நம் அனைவரதும் கவனத்திற்குரியஒரு செய்தியாகும். இப் பாதகமான நிலைமையின் பிரதிபலிப்பாக நாட்டு மக்களின் அவசிய தேவை கருதிய உற்பத்திகள் மீதான முதலீடுகள் பற்றிய ஆர்வம் போதைப் பொருள் விற்பனைக்காக திசை திருப்பப்படும் ஆபத்தும் இதிலிருக்கிறது. எனவே போதைப் பழக்கத்தின் ஆபத்தான சமூக பின் விளைவுகளை எமது மக்கள் நண்குணர்ந்து கொண்டு அனைத்து மட்டங்களிலும் இதற்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து எமது தேசத்தை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’