வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 டிசம்பர், 2011

யாழில் இரட்டைக் கொலை; சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கை


யாழ். நீர்வேலிப் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரையும் வெட்டிப் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படும் நபரை கைதுசெய்யும் முகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை வெட்டியதாகத் தெரிவிக்கப்படும் நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் இவர் வெளிநாடொன்றிலிருந்து வந்ததாகவும் பொலிஸார் கூறினர். இந்த நிலையிலேயே இவர் பற்றிய தகவல்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ். நீர்வேலிப் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி ஆகிய இருவரும் நேற்று வியாழக்கிழமை இரவு அவர்களின் உறவினரெனத் தெரிவிக்கப்படும் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நீர்வேலியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான மார்க்கண்டு உதயகுமார் (வயது 55) அவரது மனைவி வசந்தமலர் (வயது 45) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் நேற்றிரவு அயலிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவர்களின் வீட்டு வளவினுள் ஒளிந்திருந்த சந்தேக நபர் இவர்கள் இருவரையும் கூரிய ஆயுதத்தினால் தாக்கினார். இந்த நிலையில் கணவனும் மனைவியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனைத் தடுக்க முற்பட்ட அவர்களின் மகனும் குறித்த நபரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’