வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 டிசம்பர், 2011

'கொடுத்த வாக்கை நிறைவேற்ற பின்வாங்கினால் நாடு நன்மதிப்பை இழக்க நேரிடும்


மிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் பதினைந்து சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றிருந்த போதிலும் இதுவரையில் தீர்வுக்கு வராமலிருப்பது பெரும் ஆச்சரியத்தைத் தரும் விடயமாகும். யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்தி ருந்தவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் அதற்கு மேலாகவும் தீர்வை வைக்க முன்வந்தனர். ஆனால், இன்று யுத்தம் முடிவடைந்த பின் சொன்னவற்றிலிருந்து பின்வாங்கினால் நாடு தன் நன்மதிப்பை இழக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குநிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு, தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய இக்கடிதத்திற்கு மன்னிக்கவும். அதன் உள்ளடக்கத்தை நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் என்ற எண்ணத்தில் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சியைத்தரவில்லை. தன் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் இந் நாட்டில் பூரண அமைதி நிலவ வேண்டுமென்று விரும்பும் ஒரு பொறுப்புள்ள தேசபக்தி கொண்ட, வயதில் முதிர்ந்த ஒரு பிரஜையிடமிருந்து வரும் கடிதமே இது. இலங்கையில் பிறந்து, வளர்ந்து இலங்கையனாகவே மரணிக்க விரும்புகின்றவன் நான். சில விடயங்களை எழுத்தில் பதியவைத்து அவற்றை நான் சிந்திப்பதைப் போல் தங்களையும் சிந்திக்க வைப்பதே இக்கடிதத்தின் நோக்கமாகும். அது எனது கடமையென நான் கருதுகிறேன். முதலாவதாக நாட்டை ஒரு கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தியுள்ளேன் எனக் கூறுவதை விட்டுவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் அதில் உண்மையில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் பிரசன்னமும் அவர்களின் அழுத்தமும் இருந்தபோது இந்த நாட்டின் சகல மாவட்டங்களிலும் அன்றும் இன்றும் அரசால் நியமிக்கப்பட்ட அவ்வப்பகுதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களின் நிர்வாகத்திலேயே இருந்து வந்துள்ளது. நாடு என்றும் இணைந்தே இருந்தது. மேலும் இந்த அரசு இன்னுமொரு நாட்டுடன் யுத்தம் புரியவில்லை. ஒரு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய போராட்டத்தை அடக்கியது மட்டுமே. கால் நூற்றாண்டுக்கு மேலாக இன மத வேறுபாடின்றி நாடளாவிய மக்கள் நிரந்தர அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து கொண்டு மீண்டும் தமது வீட்டுக்கு உயிருடன் வருவோமா என்ற ஐயத்துடன் அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டனர். பெருமளவில் உயிர்ச்சேதமும், சொத்தழிவும் ஏற்பட்டது. ஆனால் , வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களே குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்றாகவும் ஏனைய மாவட்டங்களின் சில பகுதிகள் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகின என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன். மூன்று அல்லது நான்கு இலட்சம் மக்கள் சமைக்கவோ, அன்று இரவு நேரங்களில் தங்குவதற்கோ போதிய வசதியில்லாத சிறு பிரதேசத்திற்குள் வைக்கப்பட்டமையால் ஏற்பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவையாகும். இந்த நிலைமை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நீடித்தன. 2009 மார்ச் தொடக்கம் 2009 மே மாதம் வரை மிகவும் மோசமானதும் துன்பத்திற்குள்ளான காலமுமாகும். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் நோயாளிகள், வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் தமது அன்றாட காலை கடமைகளைக்கூட மேற்கொள்ள முடியாது சிறு பகுதிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் தாம் இருந்த அச்சிறு பகுதிக்குள் விஷ ஜந்துக்களும் குடிபுகுந்தன. வீடுகளுக்கு மின்சாரம், தெரு விளக்குகள் போன்ற வசதிகளின்றி பல ஆண்டுகள் பட்ட கஷ்டங்களைவிட அதிகமான மாணவர்கள் தங்கள் பாடங்களை படிக்க முடியாமல் போத்தல் விளக்கு வெளிச்சத்திலும்; மண்ணெண்ணெய் கிடைக்காத வேளைகளில் தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் விளக்கு வெளிச்சங்களில் வாழ்ந்தனர். தமது பல்வேறு தேவைகளை மேற்கொள்ள இவர்கள் எவ்வளவுதூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை பண்ணி பார்க்க முடியாது. இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் பலாத்காரமாக தங்கள் பிள்ளைகள் பிடித்துச் செல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பது தமது அன்றாட பணிகளில் பிரதானமாக இருந்தது. அடிப்படை உரிமைகள், பேச்சு சுதந்திரம் முதலியன மறுக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள்கூட பெருமளவில் இடம் பெற்றுள்ளது. அவர்களின் கதைகளை கேட்டால் கல்நெஞ்சுக் காரர்களையும் கண்ணீர்விட வைக்கும். மேலும் கண்ணீர் விடுவதற்கு கண்ணீரில்லை. அவர்கள் தங்கள் பிரியமானவர்களை இழந்தனர். வயது வந்த பெண்பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். வட கிழக்கில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள், ஆயிரக்கணக்கான அநாதை பிள்ளைகள் வாழ்கின்றனர். தற்போது சண்டை நின்றுவிட்டது. துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டன. நீங்கள் வெற்றிகரமாக ஒரு புரட்சியை அடக்கி விட்டீர்கள். அப்புரட்சி மீண்டும் வெடிப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை. இலங்கை இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கான உதவிகள் பல்வேறு நாடுகளிடமிருந்து கிடைத்தன பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நாடுகளுக்கும் வெற்றியில் பங்குண்டு. தங்களுடைய புத்திமதிகளை நீங்கள் கேட்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கக்கூடாதா? அயல்நாடான இந்தியா உதவாமல் இருந்திருந்தால் எமது படைகள் அழிக்கப்பட்டு புரட்சிக்காரர்கள் வெற்றி பெற்றிருப்பர். ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு உதவுவது போல் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தை வெல்வதற்கான உதவிகளை வழங்கின. அத்துடன் அவை அப்பணியை நிறுத்த வேண்டும். வடக்கில் பல்வேறு இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவ தளபாடங்கள் வழங்குவதற்கு எதுவித உரிமையும் கிடையாது. இச் செயல் பிற்காலத்தில் தங்களுடைய அரசையே சுழற்றியடிக்கின்ற வாய்ப்புக்களுக்கு வழிகோலும். சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு உதவிய ஏனைய நாடுகளுக்கு நமது நாட்டின் பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு உதவ தார்மீக கடமை உண்டு. ஆனால் அவர்களுக்கு இலங்கையிலுள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை அரசாங்கம் அடக்குமுறையின் கீழ் கொண்டுவர உதவக்கூடாது. தற்போது தங்களுடைய முதற்கடமை தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றெடுப்பதே ஆகும். வன்னி மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அரச படைகளுக்கு நிறையவே உதவியுள்ளனர் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. ஆயுதங்கள் மீதான வெறுப்பே இதற்குரிய காரணமாகும். வடகிழக்கு மக்கள் துப்பாக்கியில்லாத சூழலை உருவாக்கி அமைதியாக, சமாதானமாக வாழ விரும்புகின்றார்கள். பதினைந்து சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்து முடிந்தபின் இந்த விடயத்திற்கொரு முடிவு காணாதது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். இவ்விரு விடயத்திலும் வடகிழக்கில் இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற விடயத்திலும் விட்டுக் கொடுப்புடன் நடந்தால் நீங்கள் உங்கள் கிராமத்துக்கு போக முடியாது என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை நான் படித்தேன். தாங்கள் தயக்கம் காட்டுவதற்கு வேறு விசேட காரணங்கள் இருப்பின் நீங்கள் கொள்கையளவில் இவற்றை ஏற்றுக்கொண்டு தாங்கள் காட்டும் தயக்கத்துக்குரிய காரணங்களையும் கவனத்தில் எடுத்து இரு சாராரும் திருப்தியடையக்கூடிய ஒரு முடிவுக்கு வரலாம். இந்த அடிப்படையில் ஓர் இறுதியான தீர்வு காண்பதை நியாயமாக சிந்திக்கின்ற எந்தவொரு சிங்கள மகனும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான் என நம்புகின்றேன். ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். இவ்விரு அதிகாரங்களும் வழங்கப்படாவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண முடியாது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’