வடக்கு பிராந்தியத்தில் மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெற்றாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை புறக்கணிக்க வேண்டும் என்ற தோரணையில் 'தமிழ் சமூகம்' பெயரில் வெளியிடப்பட்ட பகிரங்கமாக்கப்பட்ட கடிதம், எங்கே அரசுடனான பேச்சுவார்த்தை இனப் பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை அளித்து விடுமோ என்ற ஆதங்கத்திலும் பயத்திலும் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்த கடிதம் மூலம் முளைவிட்ட பிரச்சினையை நேரடியாகவே எதிர்நோக்கும்விதத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பதில் அளித்திருப்பது, வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும், அப்போது அரசுடனான பேச்சுவார்த்தை குறித்த 'தமிழ் சமூகத்தின்' சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் சம்பந்தன் மேலும் கூறியுள்ளார். அதேசமயம், அரசுடனான பேச்சுவார்த்தை குறித்து பொது விவாதம் நடத்தவோ, பொது மேடையில் பேச்சுப் பொருளாக்கவோ கூட்டமைப்பு தலைமை விழையாது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். 'தமிழ் சமூகம்' முயற்சி எடுத்ததாலேயே கூட்டமைப்பு அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது என்று கருதி யாரும் மென்மேலும் அழுத்தங்களை கொடுக்க முயலக் கூடாது. கூட்டமைப்பு தமிழர் நலம் விழையும் அமைப்பே தவிர, தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை குறிக்கும் அல்லது நிலைநிறுத்தும் அரசியல் அமைப்பு அல்ல. கூட்டமைப்பின் உள்ளே புரையோடிப் போயிருக்கும் அரசியல் வித்தியாசங்களையும் வறட்டு கௌரவம் சார்ந்த தனிநபர் பிரச்சினைகளையும் அறுதியிட்டு கூறமுடியாது. 'இனப்போர்' முடிந்து நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலும், தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவே பெரும்பான்மையான வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள். என்றாலும் அனைத்து வாக்குகளும் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவே இருந்தது என்று கொள்ளமுடியாது. அதே சமயம், கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள், இனப்பிரச்சினை குறித்த அதன் தலைமையின் மனப்போக்கை உணர்ந்தே இருந்தார்கள். அந்த வகையில், சம்பந்தனின் தற்போதைய நிலைப்பாடு, அரசுடனான பேச்சுவார்த்தை குறித்து தமிழ் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களின் ஆதரவைப் பெறுவதற்கு உதவும். அதே சமயம், அவர் கூறியதுபோல் அரசுடனான பேச்சுவார்த்தையின் அனைத்து சரத்துக்களையும் ஆதியந்தமாக வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்க முடியாது. அதுபோன்றே, சமுதாய தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் விடயங்கள் பரகசியம் ஆகாது என்பதற்கோ, அதுவே கூட்டமைப்பு அரசுடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு முட்டுக்கட்டை ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதையோ மறுக்கமுடியாது. இதனிடையில், அரசும் கூட்டமைப்பும் தற்போதுள்ள பேச்சுவார்த்தைகளை உண்மையோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் கூறியுள்ளது போல் அரசு - போர்கால வெற்றி மிதப்பிலேயே இனப்பிரச்சினையை அணுகக்கூடாது. அதே சமயம் கூட்டமைப்பும், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் மனதில் நிறுத்தி, அவர்களது பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்த பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால், கடந்த காலங்களைப் போலவே, எதிர்காலத்திலும், தமிழ் பேசும் சமூகம் பிளவுபட்டு நிற்கும். இது நாடாளுமன்ற அரசியலில் மட்டுமல்ல, சமுதாய அளவிலும் உட்பிரிவினைகளை தொடர்ந்து முன்னிறுத்தி, தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை இல்லாமல் அடித்துவிடும். பின்னர் பெரும்பான்மை சிங்கள சமூகத்தை மட்டுமே குறைகூறுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். எதிர்வரும் 2012ஆம் ஆண்டின் வரவு - செலவு திட்டத்தின் நாடாளுமன்ற முடிவுரையில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பு, விடுதலை புலிகளின் பாதையில் பயணிப்பதாக பொருள்படும் விதத்தில் பேசியுள்ளார். அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவும் இதே பொருள்பட பேசியுள்ளார். எது எப்படி ஆனாலும் அரசுடனான பேச்சுவார்த்தையை கூட்டணி தொடரும் என்று சம்பந்தன் கூறியுள்ளார். இந்த உபாயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பேச்சுவார்த்தைகளின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை கூட்டணி ஏற்றுக் கொண்டு, உளசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை என்ற எண்ணம் தோன்றிவிட இடம் அளிக்கக்கூடாது. அல்லாது, யார் ஆதரவும் துணையும் இன்றி தொடர்ந்து போராட முடியும் என்றோ. அரசுடனான பேச்சுவார்த்தை அதற்கான அச்சாரம் மட்டுமே என்றோ, யாராவது தொடர்ந்து நினைப்பார்களே ஆனால், அவர்கள் தமிழ் சமூகத்தின் அண்மை கால சரித்திரத்தை எடுத்து நோக்கினால் மட்டும் போதும். உண்மை விளங்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’