கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையிலான பயணிகள் கப்பல்சேவையில் ஈடுபட்ட இந்தியாவின் எம்.வி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை கைப்பற்றி தடுத்து வைக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இக்கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டமைக்கான கொடுப்பனவுகளை இக்கப்பல் நிறுவனம் செலுத்தத் தவறியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக மார்ஷலுக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். இக்கப்பலுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை எம்.ஏ.ரஸாக் அன்ட் கம்பனி மேற்கொண்டதாகவும் இதற்காக கப்பல் நிறுவனம் 478,173.23 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் எம்.ஏ.ரஸாக் அன்ட் கம்பனியின் நிதி முகாமையாளர் ஜெய்னுல் ஆப்தீன் மொஹமட் தாரிக்கினால் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் கே.பி. லோ அசோஷியேட்ஸின் கே.பூபாலசிங்கத்தின் நெறிப்படுத்தலில், தமயந்தி பிரான்சிஸ் ஆஜரானார். தமது கட்சிக்கார், மேற்படி கப்பல் கம்பனியின் கோரிக்கைக்கு இணங்க எம்.வி. ஸ்கோஷியா கப்பலுக்கு இவ்வருடம் ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் எரிபொருள், எரிவாயு, உராய்வுநீக்கி எண்ணெய் முதலானவற்றை லங்கா மரைன்ஸ் சேர்விசஸ் லிமிடெட் நிறுவனத்துக்கூடாக விநியோகித்ததாக வழக்குரைஞர் தமயந்தி பிரான்சிஸ் கூறினார். இதற்காக செலுத்தப்பட வேண்டிய 478,173.23 டொலர்களை செலுத்துமாறு பல தடவை கோரப்பட்டபோதிலும் இப்பணம் செலுத்தப்படவில்லை எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை கடற்பப்பரப்பிலுள்ள இக்கப்பல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தின் நியாயதிக்கத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பிற்குள் சென்றுவிடலாம் எனவும் மனுதாரர் சார்பில் சுட்டிக்காட்டப்படடது. இந்நிலையில் இக்கப்பலை தடுத்துவைக்குமாறு கொழும்பு துறைமுக மார்ஷலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’