முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரில் ஒருவர் பொன்சேகாவுக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளிலும் அவரை நிரபராதியாகக் கண்ட அதேவேளை, ஏனைய இரு நீதிபதிகள் ஒரேயொரு குற்றச்சாட்டில் மாத்திரம் அவரை குற்றவாளியாகக் கண்டனர்.
இவ்வழக்கில் 2009 டிசெம்பர் 8 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு பொன்சேகா அளித்த பேட்டியில் வெள்ளைக்கொடியுடன் சரணடையும் புலிகளின் தலைவர்களை சுடுமாறு 58 ஆவது படையணித் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் எனக் கூறியதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை பரப்ப முயன்றார் என்பது பொன்சேகா மீதான முதலாவது குற்றச்சாட்டாகும். மக்கள் மத்தியில் விசுவாசமின்மையை அல்லது வெறுப்புணைர்வை ஊக்குவிக்க அல்லது பகையைமை ஏற்படுத்தும் நோக்குடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தகவல்களை பரப்பியதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை மக்களை அரசுக்கு எதிராக அதிருப்தியடைச் செய்ய அல்லது விசுவாசமின்மையாக்குவதற்கு முயன்றதாக மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இவற்றில் முதலாவது குற்றச்சாட்டில் சரத் பொன்சேகா குற்றவாளி என இந்நீதிபதிகள் குழாமின் தலைவர் தீபாலி விஜேசுந்ர, எம்.இஸட் ரஸீன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தனர். ஏனைய இரு குற்றச்சாட்டுகளிலும் அவர் நிரபராதி என அறிவித்தனர். அதேவேளை, நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ வராவெ வ இம்மூன்று குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா நிரபராதி என குறிப்பிட்டிருந்தார். முதலாவது குற்றச்சாட்டில் சரத் பொன்சேகா குற்றவாளியென இரு நீதிபதிகள் கண்டதால் அக்குற்றத்திற்காக பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’