பன்னாட்டு இராணுவங்களின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை இராணுவமும் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை எதிர்வரும் காலங்களில் உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
சர்வதேசத்தின் சவால்கள் எப்பெரிதாயினும் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனும் ஆளுமையும் எமக்கு உண்டு. ஏனெனில் 21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்த ஒரே இராணுவம் இலங்கை இராணுவமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இராணுவ கற்கைகளுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சிறந்த நெறியாக்களுடன் வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து உலகத்தில் மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்ட பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்தோம். இதனூடாக இலங்கை இராணுவம் உலகத்தின் ஏனைய இராணுவங்களை விட சிறந்ததாகவே உள்ளது. அது மட்டுமன்றி 21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை ஒழித்த முதல் இராணுவமும் இலங்கை இராணுவமேயாகும். எவ்வாறாயினும் தற்போதைய தேவைகள் மற்றம் இலக்குகளுக்காக இராணுவத்தை பல் துறைகளிலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டியதுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கட்டுமாணப் பணிகள் உட்பட பல வேளைகளில் இராணுவம் சிறந்த பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் விஷேடமாக பயிற்சிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பன்னாட்டு இராணுவங்களின் சவால்களை ஏற்கக் கூடியளவிற்கும் அவர்களுடன் சரி நிகராக, செயற்படக் கூடியளவிற்கும் எமது இராணுவம் தேர்ச்சியடைய வேண்டும். ஏனெனில் எதிர்கால சவால்களும் உலக சூழலும் அவ்வாறே அமைந்துள்ளது. எப்போதும் நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் இராணுவம் காணப்பட வேண்டும். சவால்கள் எப்பெரிதாயினும் உயிரை இரண்டாவதாக நினைத்து நாட்டிற்கும் மக்களிற்கும் முதலிடம் கொடுக்கும் மகத்தான இராணுவமே இலங்கையில் உள்ளது. இதனால் தான் ஏனைய நாடுகளின் இராணுவம் இலங்கை இராணுவம் மீது மரியாதையுடன் உள்ளது என்றும் கூறினார். _
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’