இலங்கை இராணுவத்தினருக்கு சர்வதேசத்தில் பாரிய அச்சுறுத்தல்கள் உள்ளன. இதற்கு அரசியல் உள் நோக்கங்களே பிரதான காரணமாகும். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டானது சர்வதேசத்தின் சோடிக்கப்பட்ட கதையாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டிற்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிரிகளுக்கு அடி பணியாத கொள்கையுடன் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்தின் ஊடுருவி தாக்கும் விசேட படையணி தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை பத்தரமுல்லை வோட்டர் எஞ் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் உட்பட ஏனைய பரபுகளுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காணப்பட்டது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தில் அவர்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். பிரபாகரன் கூட எவ்விதமான அச்சுறுத்தலும் இன்றி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உலா வந்தார். ஆனால் இந்த சுதந்திரம் எமக்கு காணப்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் சிறு குழுக்களாக ஆழ ஊடுருவி எதிரிகளை தாக்கியழிக்கும் விசேட படையணியை இராணுவம் ஸ்தாபித்தது. இந்த படையணியின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி பிரபாகரன் ""பதுங்கு குழியை விட்டுக் கூட வெளியே வராத நிலை ஏற்பட்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் வடக்கில் விசேட படையணியின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு புலிகள் வலியுறுத்தி வந்தனர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் முப்பது ஆண்டு கால யுத்தத்தை மூன்று வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் முடிவிற்கு கொண்டு வந்தோம். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு முறையாக போர் வியூகங்களை அமைத்து எதிரிகளுக்கு பதிலடி கொடுத்தோம். புலிகள் பின்னடைவுகளை சந்தித்து வருகையில் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளைக் கொடுத்து போரை நிறுத்த சர்வதேசம் முற்பட்டது. இதற்கும் அனுபவ ரீதியாக முகம் கொடுத்து சவால்களை வெற்றி கொண்டோம். இலங்கை இராணுவத்தைப் போன்று எந்த சூழலிலும் செயற்படக் கூடிய வேறு இராணுவம் உலகத்தில் எங்கேயும் இல்லை. பூரணமான நிபுணத்துவம் அடைந்த இலங்கை இராணுவத்தை இழிவுபடுத்தாது அனுபவங்களைப் பெற்றுக் கொண்டாலே உலக பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள முடியும். ஆனால் இன்று இலங்கை இராணுவத்திற்கு சர்வதேசத்தில் அச்சுறுத்தலான சூழலே காணப்படுகின்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது பொது மக்களை படுகொலை செய்ததாக சர்வதேசம், எம் மீது குற்றம் சுமத்துகின்றது. இதனை ஒப்புவிக்க போலிக் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கூட தயாரித்துள்ளது. இந்த சவாலையும் அரசாங்கம் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும். பொதுமக்கள் இச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்காலிக நலனுக்காக நாட்டை காட்டிக் கொடுப்பவர்களும் உள்ளார்கள். ஆனால் உலக நாடுகளில் இராணுவத் தளபதிகள் எமக்கு ஆதரவளிக்கின்றனர். அரசியல் ரீதியாக குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றமையால் அவர்களாலும் ஒன்றும் கூற முடிவதில்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’