யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்ச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் முகத்தை மறைத்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வரும் ஆயுததாரிகள் தொடர்ச்சியாக ஜனநாயக சக்திகள் மீது தாக்குதல் மேற்கொள்வது அதிகரித்துச் செல்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் தனிச் செயலாளர் இதேபோன்று தலைக்கவசம் அணிந்தவர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் குகநாதன் மீது இதே பாணியில் அவரது அலுவலகத்திற்கு அண்மையில் வைத்துத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று இதே பாணியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல்களின்போது மோட்டார் சைக்கிளில் வந்த இத்தாக்குதல்தாரிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளில் மறைத்து வைத்த கூரிய ஆயுதங்களுடனும் சிறிய துப்பாக்கிகளுடனுமே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உனக்கு தமிழீழம் வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் பாணி, தாக்குதல்தாரிகள் பேசியமுறை, பட்டப்பகலில் நடக்கின்ற சம்பவங்கள் இவற்றைப் பார்க்கின்றபோதே இவை யாரால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஜனநாயக செயற்பாடுகளும் நடக்கக்கூடாது என்பதையே இத்தாக்குதல் சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. சமாதானம் மலர்ந்துவிட்டது. வடக்கில் வசந்தம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தில் எவ்வித பயமும் பீதியும் இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச சமூகத்திற்கு கதை சொல்லும் அரசாங்கம் இத்தாக்குதலுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றது? விசாரணை என்ற பெயரில் எதுவும் நடக்காமல் ஏற்கெனவே நடந்து முடிந்த தாக்குதல்களுக்கு நடந்த அதேகதிதான் இத்தாக்குதலுக்கும் நடக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வட-கிழக்கை இப்படியான சம்பவங்கள் மூலம் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்கலாம் என்று அரசு நினைக்குமானால் எதிர்காலத்தில் அது இன்னும் பாரிய பின்விளைவுகளை உருவாக்கும் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது. இது எங்கோ ஒரு மூலையில் நடந்த தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் இல்லை என்பதையும் இது பல்வேறு சம்பவங்களின் தொடர்ச்சி என்பதை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதுடன் அதனை சர்வதேச சமூகமும் உறுதிப்படுத்த வேண்டும். நடந்து முடிந்த இக்கொலைவெறித் தாக்குதல் சம்பவமானது இலங்கை அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டியதொரு செயலாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய சம்பவங்கள் தொடரக்கூடாது என்று ஜனாதிபதியிடம் அழுத்தம் திருத்தமாகக் கோருகின்றோம்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’