மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நிதியுதவி செய்திருக்கலாம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ராஜதந்திரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இந்த தகவலை கேபிள் ஊடாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல் 2006 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி சென்னையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு நாட்களில், ரவி காண்டே என்ற இந்தியாவில் அமெரிக்க அலுவலராக செயற்பட்டவரே இந்த தகவலை அனுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு நிதியுதவிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று ரவி காண்டே குறிப்பிட்டிருந்தார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1993 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தை தோற்றுவிப்பதற்காக வை.கோபாலசாமிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே நிதியுதவி செய்திருக்கலாம் என்று தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகளின் தலைவர் சந்திரஹாசன் உட்பட்டோர் நம்பியதாக காண்டே என்ற அந்த அதிகாரியின் கருத்தாக அமைந்திருந்தது.
எனினும் வைகோவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நிதியளித்தனர் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை.
இந்தநிலையில் ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து அனுதாபம் ஒரே இரவில் இல்லாமல் போனது என்றும் அமெரிக்க கேபிள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருந்தது
இந்தநிலையில் சிறிய ஒரு கூட்டத்தினரே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தனர். இந்தநிலையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் தமிழ் அகதிகள் தமிழகத்துக்குள் பாரியளவில் வரும் வரை இந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்று ரவி காண்டே தமது கேபிள் செய்தியில் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’