வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 செப்டம்பர், 2011

யுத்த சூனிய பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளை இந்தியா, அமெரிக்கா செய்மதியில் பார்த்தன: விக்கிலீக்ஸ்

யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் விமானத் தாக்குதல் மூலமாகவும் நீண்ட தூர ஆட்டிலெறி மற்றும் ஷெல்களின் தாக்குதல் மூலமாகவும் படுகொலை செய்யப்பட்டதை இந்தியாவும் அமெரிக்காவும் செய்மதி மூலம் அவதானமாக பார்த்துக் கொண்டிருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு 2 கிழமைகளுக்கு முன்பு அமெரிக்க பிரதித் தூதுவராகக் கடமையாற்றிய ஆர்.மூரே ஒரு தூதரகச் செய்தியை அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பினார். அதில் யுத்த சூனியப் பகுதியில் நிலவிய சம்பவங்கள் பற்றிய செய்மதிப் படங்களைப் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷவோடும் அப்போதைய வெளிநாட்டு செயலர் பாலித கொஹனவோடும் பகிர்ந்து கொண்டதாகக் கூறியிருந்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவும் பதிலுக்கு இந்தியாவும் இலங்கை இராணுவத்திற்கு செய்மதி மூலம் உதவிகளை செய்து வருவதாக அமெரிக்க இராஜதந்திரிக்குக் கூறினாராம். இலங்கை அரசு ஏப்ரல் 27க்குப் பின் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசத்தில் புதிய ஷெல் தாக்குதல்கள் ஏற்படுத்திய சேதத்தை பற்றிய செய்மதிப் படங்களை மே 5 ஆம் திகதி ராஜபக்ஷவுடனும் வெளியுறவு செயலர் பாலித கொஹனவுடனும் நடந்த கூட்டத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உதவி வழங்கும் நாடுகளின் இராஜதந்திரிகளின் கூட்டத்தில் வைத்து கொள்வதன் நிமித்தம் தாம் தனிப்பட்ட ரீதியில் இதைச் செய்ததாகவும் மூரே தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பின்பு பெரிய ஆயுதங்கள் மூலம் யுத்த சூனியப் பகுதியில் தாக்குதல் ஒன்றும் இடம்பெறவில்லையென முன்னர் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு முன்பும் பின்பும் யுத்த சூனியப் பகுதியில் இடம்பெற்ற சேதம் குறித்த படங்களை ஜனாதிபதிக்கும் வெளியுறவு செயலருக்கும் காட்டுமாறும் தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் மூரேகூறியிருந்தார். நாடுகளின் தூதுவர்களின் மாநாட்டுக்கு முன்பதாக தற்போதைய நிலைவரம் பற்றி தன்னிலும் பார்க்க உங்களுக்கு களநிலைமை பற்றி அதிகம் தெரியுமென தன்னிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார் எனவும் மூரே தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக ஜனாதிபதி தனது களத் தளபதிகளிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு கள நிலைவரங்களைக் கேட்டறிந்தாராம். இந்தியாவிடம் செய்மதிகள் இருப்பதால், கள நிலைவரங்களைப் பார்க்க முடிகிறது என ராஜபக்ஷ பெருமை கொண்டாராம். நாங்களும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதை இப்போது இலங்கை அரசுக்கு தெரிய வேண்டுமென மூரே பதிலுக்கு கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தியில் கூறியுள்ளது. ஜனவரிக்கு பின்பு ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதையும் காயப்பட்டுள்ளதையும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றபோதும் அமெரிக்காவினால் சேதங்களை சரியாகக் கணிக்க முடியாது என்றும் ஆனால் சேதங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதியாகக் கூற முடியும் என்றும் கூறும் மூரேரயின் தகவலின்படி, அப்போது ஜனாதிபதி இனி அரச படைகள் சிவிலியன்களைத் தாக்க மாட்டார்ளென்றும் ஆனால் யுத்த சூனியப் பகுதியில் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இயங்குவதாகவும் இவர்கள் மண் அணைகளை மக்களைக் கொண்டு இடித்து சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற உதவுவார்களெனவும் கூறியிருந்தார். இதன் மூலம் யுத்த சூனிய பகுதிக்குள் அரசின் ஆழ ஊடுருவும் படை இயங்குவதை ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். இங்கு அதிக மக்களும் அகப்பட்டுக் கொண்டனர். இதன் மூலம் உலக அரங்கில் ஆதிக்கங்களை கொண்டுள்ளவர்களின் அரசியல், இராஜதந்திர இரட்டை வேடங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுத்தக் குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளை உலக வல்லரசுகள் அறிந்தும் செய்திகளை பரிமாறியும் வந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகிறது. மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு சர்வதேச மனித உரிமைகளைப் பேணுமாறு கோரும் அறிக்கைகளையும் இவை வெளியிட்டு வந்தமை இங்கே கவனிக்கத்தக்கது. இந்த நாடுகளே இன்று மனித உரிமை மீறலுக்காக நீதியான சுதந்திர விசாரணைகளைக் கோருவது புதுமையானது. இவர்களிடம் இருக்கும் மிகவும் நுட்பமான செய்மதிப் படங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றம் புரிந்தோரை நிறுத்துவதற்கு தாராளமாக உதவும். இதைத்தான் ஐ.நா. செயலர் அறிக்கையும் புலப்படுத்துகிறது. ஐ.நா. வின் அரசியல் அமைப்புகளும் சபைகளும் சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு தவறி விட்டதாக இதன் மூலம் உறுதிபடக் கூறலாம். தாங்கள் சிவிலியன்களைப் பாதுகாப்பதாகவும் ஐ.நா. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க காரியாலயங்களைப் பாதுகாத்துள்ளதாகவும் பகிரங்கமாகவும் தனியாகவும் கருத்துக் கூறும் மூத்த சர்வதேச அதிகாரிகள் அன்று பகிரங்கமாக சிவிலியன்களின் சேதங்களைத் தெரிவித்திருந்தால் வன்னியின் நிலைமை உலகுக்கு வெளிவரும்போது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான கோரிக்கை வலுப் பெற்றிருக்கும் இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை மீறலுக்கோ அல்லது மனித உரிமைகள் மீறப்படுவதற்கோ கணக்கீட்டைக் கோருவது ஓர் அரசின் கொள்கையோ அல்லது தெரிவோ அல்ல. ஆனால், இது உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் கடமையாகும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மார்ச் 2011இல் வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’