ஜெனீவாவில் இம்மாதம் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் பீரிஸ் இதுவரை சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் அமைச்சர் பீரிஸ் தெளிவுபடுத்தி வருகின்றார்.
தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக பேச்சு நடத்தியுள்ளார்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்புக்களின்போது ஆராயப் பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய நிலைமை யில்சேர்பியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்று திங்கட் கிழமை அங்கு நடைபெறவுள்ள அணி சேராநாடுகள் அமைப்பின் 50 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் 36 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களில் பலருடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஜோர்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளார்.
ஜோர்தானிலிருந்து ஜெனிவாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமைச்சர் பீரிஸ் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’