கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ. பிளெக்கிற்கும் இடையிலான இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் ரொபட் ஓ. பிளெக் ஜனாதிபதியிடம் கேட்டறிந்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நவம்பர் மாத நடு பகுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியாகும் என உறுதியளித்த ஜனாதிபதி, குறித்த அறிக்கைகிணங்க அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்ததுடன் இரு தரப்பிற்கும் இடையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் நடைபெறும் எனவும் நாம் தெரிவித்தோம் என அவர் கூறினார்.
வடக்கில் இராணுவ மயப்படுத்துவதாக பிளெக் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார். ஏனைய பகுதிகளை போன்று வட பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கின்றது. இது ஏனைய நாடுகளை போன்றே அது தேவையெனவும் நாம் கூறினோம் என அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள ரொபட் ஓ. பிளெக் அரச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்தது. யாழிலிருந்து கொழும்பு திரும்பும் ரொபட் ஓ. பிளெக் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’