சு விட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இன்று திங்கட்கிழமை கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின்; செயற்பாடுகளை இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் மனித உரிமைகளை நிலைநிறுத்த தவறியமைக்கு இலங்கை ஓர் உதாரணம் என நவநீதம் பிள்ளை கூறிய நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் மூண்டது.
'பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அரசுகளினால் கைகொள்ளப்பட்ட நடவடிக்கைகளானவை அடிக்கடி மனித உரிமைகள் விடயத்தைப் பொறுத்தவரை போதாதவையாக இருந்தன. இவை அனைத்தும் அடிக்கடி மனித உரிமைகளை அரித்ததுடன், வித்தியாசம் மற்றும் பாகுபாட்டு கலாசாரமொன்றை ஏற்படுத்தின. இவை வன்முறை மற்றும் பழிவாங்கல் சுழற்சிகள் ஏற்பட வழிவகுத்தன. இலங்கை அத்தகையதொரு வகையாகும்' என நவநீதம் பிள்ளை கூறினார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுகையில் ஐ.நா. நடைமுறைகளை தாழ்த்துவதாக தான் கருதும் சம்பவங்களை சுட்டிக்காட்டினார்.
"இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழுவின் அறிக்கையை உங்கள் (நவநீதம் பிள்ளை) அலுவலகத்திற்கு பரிமாற்ற ஐ.நா.செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இம்மாதம் 9 ஆம் திகதி மதிய உணவு விருந்து சந்திப்பொன்றின்போது நாடுகள் குழுவொன்றுக்கு நீங்கள் அறிவித்ததாக அறிந்தோம்.
அதற்குமுன் உங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின்போது இத்தகைய பரிமாற்றம் குறித்து நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை பேரவையின் 29 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிந்துகொள்ள நேர்ந்தது என்பது உங்களுக்கும் எனக்கும் அசௌகரியமானதாகும்" என அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’